Tuesday, November 22, 2011

தமிழகக் கனிம வளம்

தமிழ்நாட்டின் முக்கியமான கனிம வளங்கள் பழுப்பு நிலக்கரி, மேக்னசைட், சுண்ணாம்புக்கல், பாக்சைட், ஜிப்சம், உப்புகள் ஆகியன. தமிழ்நாட்டின் முக்கியமான கனிமவளம் பழுப்பு நிலக்கரி அல்லது லிக்னைட் ஆகும். இந்தியாவில் தமிழ்நாட்டில் மட்டும் தான் பெருமளவில் லிக்னைட் வெட்டியெடுக்கப்படுகிறது.


பழுப்பு நிலக்கரி :

தமிழகத்தில் லிக்னைட்டின் இருப்பு சுமார் 2500 மில்லியன் டன்களாகும். இது சுமார் 500ச.கி.மீ பரப்பில் பரவியுள்ளது. இது ஒரு முக்கியமான டெர்ஷியரி கால நிலக்கரி வயலாகும். முக்கியமான நிலக்கரிப் படுக்கைகள் கடலூரிலிருந்து சுமார் 40கி.மீ தொலைவில் அமைந்துள்ளன. கடலூர் மணற் பாறையில் 40மீ ஆழத்தில் பழுப்பு நிலக்கரி கிடைக்கிறது. ஆர்டீஷியன் ஊற்றுகள் இருப்பதால் நிலக்கரியை வெட்டி எடுப்பதில் பிரச்சனை ஏற்படுகிறது. ஆண்டு உற்பத்தி 12 மில்லியன் டன்களாகும். தமிழ்நாட்டின் சக்தி மற்றும் உரஉற்பத்திக்கு பழுப்பு நிலக்கரியின் பங்கு அதிக அளவில் உள்ளது.


சுண்ணாம்புக் கல் :

பழுப்பு நிலக்கரிக்கு அடுத்தபடியாக, சுண்ணாம்புக்கல் தமிழ்நாட்டின் முக்கியமான கனிம வளமாக இருக்கிறது. சிமெண்ட், உற்பத்திக்கு பயன்படுகின்ற இது பெரம்பலூர், கரூர், கோயம்புத்தூர், சேலம், இராமநாதபுரம், திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களில் பெருமளவு கிடைக்கிறது.


பாக்சைட் :

அலுமினியம் தயாரிக்கத் தேவையான பாக்சைட் படிவுகள் சேலம் மாவட்டத்தில் சேர்வராயன் மலைகளிலும், பெரம்பலூர், மாவட்டத்திலும் கொல்லிமலைப் பகுதிகளிலும் கிடைக்கின்றன.


ஜிப்சம் :

சிமெண்ட் மற்றும் உரங்கள் தயாரிக்கப் பயன்படும் ஜிப்சம் பெரம்பலூர், திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களில் கிடைக்கிறது


உப்பு :

கடற்கரைப் பகுதிகளில் உப்பு கிடைக்கிறது. வேதாரண்யம், தூத்துக்குடி பகுதிகளில் அதிகமாக உப்பு தயாரிக்கப்படுகிறது. சூரிய வெப்பத்தினால் ஆவியாக்கும் முறையில் உப்பு தயாரிக்கப்படுகிறது.


இரும்பு :

சேலம் மாவட்டத்திலுள்ள கஞ்ச மலைப் பகுதியில் இரும்புத் தாதுப் படிவுகள் உள்ளன. தமிழ்நாட்டிலுள்ள இரும்புத்தாது மேக்னசைட் வகையைச் சார்ந்தது. அதில் 30% முதல் 45% வரை இரும்பு உள்ளது. சிலிகா அதிகம். களிமண் படிவுகள் தமிழ்நாடு முழுவதும் கிடைக்கின்றன. பல பகுதிகளில் கிரானைட் கிடைக்கிறது. அவை உள்நாட்டில் பயன்படுத்தப்படுவதுடன் ஏற்றுமதிக்கும் பயன்படுகின்றது.


பெட்ரோலியம் :

தமிழ்நாட்டில் காவிரிப் படுக்கையில் பெட்ரோலியம் கிடைக்கிறது. 1984ம் ஆண்டு முதல் காவிரிப் பகுதிகளில் எண்ணெய்க் கிணறுகள் தோண்டப்பட்டு வருகின்றன. இதுவரை 100க்கும் மேற்பட்ட கிணறுகள் தோண்டப்பட்டு விட்டன. நரிமணம், கோவில் களப்பால், அடியக்கா மங்கலம், கமலாபுரம், புவனகிரி ஆகிய பகுதிகளில் பெட்ரோலியம் கிடைக்கிறது. பனங்குடி என்னுமிடத்தில் பெட்ரோலிய சுத்திகரிப்பு நிலையம் நிறுவப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment