Tuesday, November 22, 2011

தமிழகத்தின் நீர்ப்பாசன முறைகள்

தமிழ்நாட்டின் மழைப் பொழிவு, வேறுபாடுகள் மிக்கதாகவும் நிச்சயமற்ற தன்மையோடும் பருவ அமைப்போடும் உள்ளது. ஆகவே வேளாண்மைக்குத் தேவையான நீர் தேவையான நேரத்தில் கிடைப்பது உறுதியில்லை. எனவே நீர்ப்பாசன வசதி முக்கியமானதாகின்றது. ஆற்று நீர் குறிப்பாக காவிரி மற்றும் தாமிரபரணி ஆறுகளில் நீண்ட காலமாக, நீர்ப் பாசனத்திற்குப் பயன்படுத்தப்பட்டு வருகிறது. கிணற்றுப் பாசனம், ஏரிப்பாசனம், கால்வாய்ப் பாசனம் ஆகியன முக்கியமான மூன்று நீர்ப்பாசன முறைகள் ஆகும்.


கிணற்றுப் பாசனம் :

இது ஒரு பழைய முறையாகும். கிணற்றுப் பாசனம் தமிழ்நாட்டின் மிக முக்கியமான நீர்ப்பாசன முறையாக உள்ளது. தமிழ்நாடு சுமார் 44% கிணற்றுப் பாசனம் பெறுகிறது. தமிழ்நாட்டின் மேற்குப் பகுதிகளிலும் வேலூர், மதுரை, விருதுநகர் மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களில் கிணற்றுப் பாசனம் முக்கியமாக உள்ளது.


ஏரிப் பாசனம் :

இந்தியாவில் ஏரிப்பாசனம் அதிக அளவில் நடைபெறும் மாநிலங்களில் தமிழ்நாடு ஒன்றாகும். தமிழ்நாட்டில் 39,000 ஏரிகள் உள்ளன. தமிழ்நாட்டில் நீர்ப்பாசனம் பெறும் பரப்பில் சுமார் 22% ஏரிப்பாசனத்தால் பயனடைகின்றது. வீராணம், மாமண்டூர், மதுராந்தகம், காவேரிப்பாக்கம், இராஜசிங்கமங்கலம், செம்பரம்பாக்கம் ஆகியன தமிழ்நாட்டின் சில பெரிய ஏரிகளாகும். தென் கிழக்குப் பகுதி (இராமநாதபுரம், விருதுநகர், திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்கள்) மற்றும் வடக்குப் பகுதி (காஞ்சிபுரம், திருவள்ளூர் மற்றும் வேலூர் மாவட்டங்கள்) ஆகிய இரு மாவட்டங்களில் ஏரிப்பாசனம் முக்கியமாக உள்ளது.


கால்வாய்ப் பாசனம் :

தமிழ்நாட்டின் நீர்ப்பாசனத்தின் பரப்பில் சுமார் 33% கால்வாய்ப் பாசனத்தால் பயன்பெறுகிறது. இதில் பாதியளவு தஞ்சாவூர், நாகப்பட்டினம், மாவட்டங்களில் உள்ளது. கோயம்புத்தூர், ஈரோடு, திருச்சி, கடலூர், மதுரை ஆகிய மாவட்டங்களில் கால்வாய்ப் பாசனம் முக்கியமானதாக உள்ளது. கால்வாய்களின் மூலம் பாசனவசதி அளிக்கும் முக்கியமான நீர்த் தேக்கங்கள் மேட்டூர், சாத்தனூர், பவானிசாகர், பரம்பிகுளம் ஆளியாறு, பெரியாறு, வைகை, அமராவதி, கிருஷ்ணகிரி ஆகியன ஆகும்.

No comments:

Post a Comment