Friday, December 09, 2011

தமிழகத்தின் வேளாண் பயிர்கள்

உணவுப் பயிர்கள்

நெல் :

தமிழக மக்களின் முக்கிய உணவுப் பயிராகவும் அதிக பரப்பில் பயிரிடப்படும் முக்கியமான பயிராகவும் நெல் உள்ளது. மொத்தம் பயிரிடப்படும் பரப்பில் மூன்றில் ஒரு பகுதியில் நெல் பயிரிடப்படுகிறது. காவிரி டெல்டா பகுதி நெல் சாகுபடிக்குப் புகழ் பெற்றதாகும். தஞ்சாவூர், திருவள்ளூர், மதுரை, விருதுநகர், இராமநாதபுரம், திருநெல்வேலி, தூத்துக்குடி, ஆகிய மாவட்டங்களில் நெல் அதிக அளவில் உற்பத்தி செய்யப்படுகிறது.

பிற தானியங்கள் :

தமிழ்நாட்டில் நெல்லுக்கு அடுத்தபடியாக சோளம், கம்பு மற்றும் கேழ்வரகு பரவலாக பயிரிடப்படுகின்றன. மேற்கு பகுதிகளில் குறிப்பாக கோயம்புத்தூர் பீடபூமி மற்றும் கம்பம் பள்ளத்தாக்குகளில் சோளம் அதிக அளவில் பயிரிடப்படுகிறது. தமிழ்நாட்டின் மூன்றாவது முக்கிய பயிரான கம்பு இராமநாதபுரம், திருநெல்வேலி, பெரம்பலூர், கரூர், சேலம் ஆகிய மாவட்டங்களில் பயிரிடப்படுகிறது. ராகி தர்மபுரி, வேலூர், கடலூர், கோயம்புத்தூர் ஆகிய மாவட்டங்களில் பயிரிடப்படுகிறது.

பருப்பு வகைகள் :

பருப்பு வகைகள் பயிரிடப்படும் பரப்பு தஞ்சாவூர் மற்றும் தர்மபுரி மாவட்டங்களில் மிகுதியாக உள்ளது. பருப்பு வகைகளின் உற்பத்தி தமிழகத்தின் தேவையை பூர்த்தி செய்து கொள்வதற்குப் போதுமானதாக இல்லை.

பணப் பயிர்கள் :

பருத்தி, கம்பு, எண்ணெய் வித்துகள் ஆகியன தமிழ்நாட்டின் முக்கியமான பணப்பயிர்களாகும். உணவுப் பொருளாக மட்டுமின்றி, தொழிற்சாலைகளின் தேவையைப் பூர்த்தி செய்து கொள்ளவும் பணப்பயிர்கள் பயிரிடப்படுகின்றன.

பருத்தி :

தமிழ்நாட்டில் கோயம்புத்தூர் பீடபூமி, வைகை - வைப்பாறு பகுதிகள் ஆகிய இரண்டு பகுதிகளில் பருத்தி முக்கிய பயிராக உள்ளது. கோயம்புத்தூர், மதுரை, விருதுநகர், திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களில் பெரும் பரப்பில் பருத்தி பயிரிடப்படுகின்றது.

கரும்பு :

தமிழ்நாட்டில் கடலூர், திருச்சி, திருவள்ளூர், காஞ்சிபுரம், ஈரோடு, வேலூர், கோயம்புத்தூர் ஆகிய மாவட்டங்களில் பெரும் பரப்பில் கரும்பு பயிரிடப்படுகிறது. இந்தியாவில் கரும்பு பயிரிடப்படும் மாநிலங்களில் தமிழ்நாட்டில் தான் மகசூல் அதிகமாக உள்ளது.

எண்ணெய் வித்துக்கள் :

நிலக்கடலை, எள், ஆமணக்கு, தேங்காய் ஆகியன தமிழ்நாட்டில் பயிரிடப்படும் முக்கியமான எண்ணெய் வித்துப் பயிராகும். வேலூர், திருவண்ணாமலை, விழுப்புரம், சேலம், புதுக்கோட்டை மாவட்டங்களில் நிலக்கடலை முக்கிய பயிராக உள்ளது. வந்தவாசி, திருவண்ணாமலை, செஞ்சி, ஆகிய பகுதிகளில் செறிவு அதிகம். தர்மபுரி, கடலூர், பெரம்பலூர், மதுரை ஆகிய மாவட்டங்களில் எள் முக்கிய பயிராக உள்ளது. எல்லா மாவட்டங்களிலும் தென்னை இருந்தாலும், தஞ்சாவூர், கன்னியாகுமரி, கோயம்புத்தூர் மாவட்டங்களில் முக்கியமாக உள்ளது. தர்மபுரி, சேலம் மாவட்டங்களில் ஆமணக்கு பயிரிடப்படுகிறது. சூரியகாந்தி ஒரு புதிய எண்ணெய் வித்துபயிராக பல இடங்களில் பயிரிடப்பட்டு வருகிறது.

தோட்டப்பயிர்கள் :

தமிழ்நாட்டில் பயிரிடப்படும் தோட்டப்பயிர்களில் முக்கியமானவை தேயிலை மற்றும் காப்பி பயிர்களாகும். தமிழ்நாட்டில் நீலகிரி மாவட்டத்தில் தேயிலை, காப்பி ஆகியன அதிக அளவில் பயிரிடப்படுகின்றன ஆனைமலை, கொடைக்கானல், ஏற்காடு ஆகிய மலைப்பகுதிகளிலும் பயிரிடப்படுகின்றன.

No comments:

Post a Comment