Friday, May 18, 2012

உரிமை/கடமை/கட்டாயம்

"ஓட்டளிப்பது நமது உரிமை"
"ஓட்டளிப்பது நமது கடமை"
"ஓட்டளிப்பது நமது கட்டாயம்"

தேர்தலாணைய இணையதளத்திற்கு வழி தவறி வந்துவிட்டோமோ? என நினைக்க வேண்டாம்.
இவை நமது ஜனநாயக உரிமை/கடமை/கட்டாயமான ஓட்டை பெறுவதற்காக கட்சிகளும்,
தேர்தல் ஆணையமும் தேர்தல் காலங்களில் போடும் கூச்சல்கள்.
சரி இவ்வளவு சத்தமாக கூவுகிறார்களே, மேலும் எந்தவொரு செயலும் உரிமையாக
இருந்து கடமையாக மாறி பின்பு கட்டாயமாக்கப்பட்டதாக வரலாறு இல்லையே.
ஒருவேளை ஓட்டளிப்பது பெரிய மாற்றத்தை கொண்டுவந்துவிடுமோ? என்றெண்ணி,
ஓட்டளிப்பதால் என்ன பயன் என்று வினவினால், அவர்கள் கூறும் பதில்,

"ஜனநாயகம் காக்கப்படவேண்டும்"
"மக்களாட்சி மதிக்கப்படவேண்டும்"

இந்த பதிலை கேட்டவுடன் நமது ஆர்வம் பொசுங்கி விடுகிறது. ஏனென்றால், 60
வருடங்களாக ஜனநாயகத்தை காத்துவருகிறோம், மக்களாட்சியை மதித்து வருகிறோம்.
ஆனால் அந்த ஜனநாயகத்தால் அடித்தட்டு ஜனங்களை காக்க முடியவில்லை.
மக்களாட்சியால் மக்கள் வாழ்வில் மலர்ச்சியை கொண்டுவரமுடியவில்லை.

அப்படியானால், ஓட்டளித்தால் அனைத்தும் மாறிவிடும் என்று கூறுவது ஆளும்
வர்க்கத்தினால் ஏற்படுத்தப்படும் மாயை என்று எண்ணினால், உடனே 60 ஆண்டுகால
ஜனநாயகத்தால் பொருளாதாரம் உயரவில்லையா ? வறுமைக்கோட்டிற்கு மேலே மக்கள்
தூக்கிவிடப்படவில்லையா? என்று கேட்கிறார்கள். பொருளாதாரம்
உயர்ந்துவிட்டது ஆனால் அடித்தட்டு மக்களின் வாழ்க்கைத்தரம்
தாழ்ந்துவிட்டது. வறுமைக்கோட்டிற்கு மேலே மக்கள் ஏற்றப்பட்டுள்ளார்களா?
அல்லது மக்களுக்கு கீழே வறுமைக்கோடு தள்ளப்பட்டுள்ளதா?

சரி, ஓட்டால் பயன்பெறும் அரசியல்வாதிகள்தான் சுய இலாபத்தையே குறிக்கோளாய்
கொண்டு உள்ளனர். ஓட்டளிக்கும் நாம் சரியாக உள்ளோமா? என பார்த்தால் அது
மிக மோசமாக உள்ளது.
"நேற்று தந்தை விலையில்லா தொலைக்காட்சி வாங்கிய பொழுது முட்டாள்தனம் என்றேன்,
இன்று தாய் விலையில்லா மின்விசிறி வாங்கும் பொழுது ஏமாளித்தனம் என்றேன்,
ஆனால் நாளை எனக்கு வழங்கப்பட இருக்கும் விலையில்லா மடிக்கணினியை எண்ணி
மயக்கத்தில் இருக்கிறேன்."
இது தான் தற்பொழுதைய சமுதாய நிலைமை.

யாருக்கும் வாக்களிக்க விருப்பமில்லை என 49-O படிவத்தை பயன்படுத்தலாம் என
எண்ணினால், அந்த படிவத்தையும் எனக்கு மடிக்கணினி கொடுத்த ஆளும்
கட்சிகாரர்களும், 1000 ரூபாய் கொடுத்த எதிர்கட்சிகார்களும் கூடி உள்ள
இடத்திலே நின்று நிரப்ப வேண்டியுள்ளது. அந்த 49-O விருப்பத்தையாவது
ஓட்டளிக்கும் இயந்திரத்தில் வைக்க வேண்டுமென்று கேட்டால், மீண்டும் அதே
குரல்,

"ஜனநாயகம் காக்கப்பட வேண்டும்"
"மக்களாட்சி மதிக்கப்படவேண்டும்"

என்னால் என்ன சொல்லமுடியும் கீழ்கண்ட ஒன்றைத்தவிர,

"அவனவன் ஆயிரம் பிரச்சனைய வச்சுகிட்டு சந்தோஷமா இருக்கான். இந்த ஒரு ஓட்ட
வச்சுகிட்டு நான் படுற அவஸ்த இருக்கே ஐயய்யய்யோ...."

No comments:

Post a Comment