Thursday, August 09, 2012

அச்சம் இல்லை (பண்டாரப் பாட்டு)

அச்சம் இல்லை அச்சம் இல்லை அச்சம் என்பது இல்லையே!
இச்சகத்து உ(ள்) ளோர் எலாம்
எதிர்த்து நின்ற போதிலும்
அச்சம் இல்லை அச்சம் இல்லை அச்சம் என்பது இல்லையே!
துச்சமாக எண்ணி நம்மைத்
தூறு செய்த போதிலும்
அச்சம் இல்லை அச்சம் இல்லை அச்சம் என்பது இல்லையே!
பிச்சை வாங்கி உண்ணும் வாழ்க்கை
பெற்றுவிட்ட போதினும்
அச்சம் இல்லை அச்சம் இல்லை அச்சம் என்பது இல்லையே!

கச்சு அணிந்த கொங்கை மாதர்
கண்கள் வீசு போதிலும்
அச்சம் இல்லை அச்சம் இல்லை அச்சம் என்பது இல்லையே!
நச்சை வாயிலே கொணர்ந்து
நண்பர் ஊட்டும் போதினும்
அச்சம் இல்லை அச்சம் இல்லை அச்சம் என்பது இல்லையே!
பச்சை ஊன் இயைந்த வேல்
படைகள் வந்த போதினும்
அச்சம் இல்லை அச்சம் இல்லை அச்சம் என்பது இல்லையே!
உச்சிமீது வான்இடிந்து
வீழுகின்ற போதினும்
அச்சம் இல்லை அச்சம் இல்லை அச்சம் என்பது இல்லையே!

-மகாகவி பாரதியார்

No comments:

Post a Comment