Saturday, December 31, 2011

செம்மொழிக்கான தகுதிகள்

செம்மொழி என்பதற்குப் பொருளாக "செம்மைத் தன்மை வாய்ந்த மொழி" என்று கொள்ளலாம். செம்மைத் தன்மைப் பண்புகள் மிகுதியாக பெற்றுள்ள மொழியே செம்மொழியாகும். ஆங்கிலத்தில் இதனை Classical Language என்பர். செவ்வியல் மொழியே செம்மொழியாகக் குறிக்கப்படுகின்றது.


தமிழறிஞர் பரிதிமாற் கலைஞர், செம்மொழியாவது யாது? என்ற வினாவுக்கு விடையளிக்கும் போது, "திருந்திய பண்பும், சீர்த்த நாகரிகமும், பொருந்திய தூய மொழியே செம்மொழி" என்று கூறியுள்ளார்.


செவ்வியல் இலக்கியம் என்பதற்குப் பிரிட்டானியா தகவல் களஞ்சியம் பின்வருமாறு பொருள் கூறுகின்றது. "பண்டைய காலத்தின் உத்வேகம் கொண்டு பிற்காலத்தில் படைக்கப்பட்டவற்றை நவீன செவ்வியல் எனும் சொல் குறிக்கின்றது. மிக விரிந்த தளத்தில் செவ்வியல் என்பது நேர்த்தி, துல்லியம், எளிமை, கண்ணியம், கட்டுப்பாடு, ஒழுங்கு மற்றும் விகிதாசார அளவு உள்ளிட்ட நீடித்து நிற்பதும் உலகளாவியதுமான பண்புகளைப் பின்பற்றுவதாகும்"


முனைவர் கா.சிவதம்பி செம்மொழிக்கான பண்புகளாகத் தொன்மை, செழுமைவளம், தொடர்ச்சி என்ற மூன்றினை சுட்டுகின்றார்.

செம்மொழிக்குரிய அடிப்படைத் தகுதிகளாக 11 கூறுகளை மணவை முஸ்தபா உருவாக்கித் தந்துள்ளார் அவை பின்வருமாறு:

1) தொன்மை

2) பிறமொழித் தாக்கமில்லாத் தனித் தன்மை

3) தாயமைத்தன்மை

4) தனித்தன்மை

5) இலக்கியவளம், இலக்கணச் சிறப்பு

6) பொதுமைப் பண்பு

7) நடுவுநிலைமை

8) பண்பாடு, கலை, பட்டறிவு வெளிப்பாடு

9) உயர்சிந்தனை

10) கலை, இலக்கிய தனித் தன்மை வெளிப்பாடு

11) மொழிக் கோட்பாடு ஆகியன.


செம்மொழி எனும் தரத்தை வழங்கும் குழுவினர் மூன்று விதமான வரையறைகளை வகுத்துள்ளனர்

1) 1,550 முதல் 2,000ஆண்டுகள் வரையிலான தொன்மையான நூல்களைப் பெற்றிருத்தல் வேண்டும்

2) அம்மொழியைப் பயன்படுத்தும் பல தலைமுறையினர் பண்பாட்டுப் பாரம்பரியம் உடையதாகக் கருதும் இலக்கிய நூல்கள் இருத்தல் வேண்டும்.

3) அம்மொழிக்கே உரியதாகவும் மற்ற மொழிக் குடும்பத்திடமிருந்து கடன் பெறாததுமாக இருத்தல் வேண்டும்.

உயர்தனிச் செம்மொழி என்ற புதுவகை மொழிகளை உருவாக்குவதற்கு இந்திய அரசு 12.10.2004 அன்று அரசினுடைய அரசிதழில் ஆணை பிறப்பித்துள்ளது. உயர்தனிச் செம்மொழியாக வகைப்படுத்துவதற்குரிய தகுதிப்பாடுகளாகப் பின்வருமாறு நமது அரசு வரையறுக்கின்றது:

1) ஆயிரம் ஆண்டுகளுக்கு அதிகமான பழைமைப் படைப்புகள் பதிவான வரலாறு.

2) தொடர்ந்து வரும் பேச்சு வழக்கு, மைய தலைமுறையினரால் மதிப்புடையதாகக் கருதப்படும் வழிவந்த மரபுரிமையும் தொன்மையும் கொண்ட இலக்கியங்களும் படைப்புகளும்

3) பேச்சு வழக்குடைய மற்றெந்த இனத்திடமிருந்து வாங்காத தானே உருவான இலக்கிய மரபு.


மேற்கண்ட கருத்துக்கள் அனைத்தும் செம்மொழித்தகுதிகள் என அறிஞர்களால் வரையறுக்கப்பட்டுள்ளன.

Tuesday, December 20, 2011

தமிழின் முக்கிய இலக்கண நூல்கள்

1) அகத்தியம் - அகத்தியர்

2) தொல்காப்பியம் - தொல்காப்பியர்

3) இறையனார் களவியல் - இறையனார்

4) புறப்பொருள் வெண்பாமாலை - யனாரிதனார்

5) யாப்பருங்கலம் - அமிர்தசாகரனார்

6) யாப்பருங்கலக் காரிகை - அமிர்தசாகரனார்

7) வீரசோழியம் - புத்திமித்திரர்

8) நேமிநாதம் - குணவீரபண்டிதர்

9) தண்டியலங்காரம் - தண்டி

10) நன்னூல் - பவணந்தி முனிவர்

11) அகப்பொருள் - நம்பியகப் பொருள்

12) நவநீதப் பாட்டியல் - நவநீதநாடான்

13) சிரம்பரப் பாட்டியல் - மஞ்சோதியர்

14) மாறனலங்காரம் - மஞ்சோதியர்

15) மாறன் அகப்பொருள் - திருக்குருகைப் பெருமாள் கவிராயர்

16) சிதம்பரச் செய்யுட்கோவை - குமரகுருபரர்

17) பிரயோக விவேகம் - சுப்பிரமணிய தீட்சிதர்

18) இலக்கண விளக்கம் - வைத்தியநாத தேசிகர்

19) இலக்கண விளக்கச் சூறாவளி - சிவஞான முனிவர்

20) இலக்கண கொத்து - சாமிநாத தேசிகர்

21) தொன்னூல் விளக்கம் - வீரமாமுனிவர்

22) பிரபந்த தீபிகை - முத்து வேங்கட சுப்பையர்

23) முத்து வீரியம் - முத்துவீர உபாத்தியாயர்

24) சாமிநாதம் - சாமி கவியரசர்

25) காக்கைபாடினியம் - காக்கை பாடினியார்

26) வச்சனந்திமாலை - குணவீரத பண்டிதர்

Friday, December 09, 2011

தமிழகத்தின் வேளாண் பயிர்கள்

உணவுப் பயிர்கள்

நெல் :

தமிழக மக்களின் முக்கிய உணவுப் பயிராகவும் அதிக பரப்பில் பயிரிடப்படும் முக்கியமான பயிராகவும் நெல் உள்ளது. மொத்தம் பயிரிடப்படும் பரப்பில் மூன்றில் ஒரு பகுதியில் நெல் பயிரிடப்படுகிறது. காவிரி டெல்டா பகுதி நெல் சாகுபடிக்குப் புகழ் பெற்றதாகும். தஞ்சாவூர், திருவள்ளூர், மதுரை, விருதுநகர், இராமநாதபுரம், திருநெல்வேலி, தூத்துக்குடி, ஆகிய மாவட்டங்களில் நெல் அதிக அளவில் உற்பத்தி செய்யப்படுகிறது.

பிற தானியங்கள் :

தமிழ்நாட்டில் நெல்லுக்கு அடுத்தபடியாக சோளம், கம்பு மற்றும் கேழ்வரகு பரவலாக பயிரிடப்படுகின்றன. மேற்கு பகுதிகளில் குறிப்பாக கோயம்புத்தூர் பீடபூமி மற்றும் கம்பம் பள்ளத்தாக்குகளில் சோளம் அதிக அளவில் பயிரிடப்படுகிறது. தமிழ்நாட்டின் மூன்றாவது முக்கிய பயிரான கம்பு இராமநாதபுரம், திருநெல்வேலி, பெரம்பலூர், கரூர், சேலம் ஆகிய மாவட்டங்களில் பயிரிடப்படுகிறது. ராகி தர்மபுரி, வேலூர், கடலூர், கோயம்புத்தூர் ஆகிய மாவட்டங்களில் பயிரிடப்படுகிறது.

பருப்பு வகைகள் :

பருப்பு வகைகள் பயிரிடப்படும் பரப்பு தஞ்சாவூர் மற்றும் தர்மபுரி மாவட்டங்களில் மிகுதியாக உள்ளது. பருப்பு வகைகளின் உற்பத்தி தமிழகத்தின் தேவையை பூர்த்தி செய்து கொள்வதற்குப் போதுமானதாக இல்லை.

பணப் பயிர்கள் :

பருத்தி, கம்பு, எண்ணெய் வித்துகள் ஆகியன தமிழ்நாட்டின் முக்கியமான பணப்பயிர்களாகும். உணவுப் பொருளாக மட்டுமின்றி, தொழிற்சாலைகளின் தேவையைப் பூர்த்தி செய்து கொள்ளவும் பணப்பயிர்கள் பயிரிடப்படுகின்றன.

பருத்தி :

தமிழ்நாட்டில் கோயம்புத்தூர் பீடபூமி, வைகை - வைப்பாறு பகுதிகள் ஆகிய இரண்டு பகுதிகளில் பருத்தி முக்கிய பயிராக உள்ளது. கோயம்புத்தூர், மதுரை, விருதுநகர், திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களில் பெரும் பரப்பில் பருத்தி பயிரிடப்படுகின்றது.

கரும்பு :

தமிழ்நாட்டில் கடலூர், திருச்சி, திருவள்ளூர், காஞ்சிபுரம், ஈரோடு, வேலூர், கோயம்புத்தூர் ஆகிய மாவட்டங்களில் பெரும் பரப்பில் கரும்பு பயிரிடப்படுகிறது. இந்தியாவில் கரும்பு பயிரிடப்படும் மாநிலங்களில் தமிழ்நாட்டில் தான் மகசூல் அதிகமாக உள்ளது.

எண்ணெய் வித்துக்கள் :

நிலக்கடலை, எள், ஆமணக்கு, தேங்காய் ஆகியன தமிழ்நாட்டில் பயிரிடப்படும் முக்கியமான எண்ணெய் வித்துப் பயிராகும். வேலூர், திருவண்ணாமலை, விழுப்புரம், சேலம், புதுக்கோட்டை மாவட்டங்களில் நிலக்கடலை முக்கிய பயிராக உள்ளது. வந்தவாசி, திருவண்ணாமலை, செஞ்சி, ஆகிய பகுதிகளில் செறிவு அதிகம். தர்மபுரி, கடலூர், பெரம்பலூர், மதுரை ஆகிய மாவட்டங்களில் எள் முக்கிய பயிராக உள்ளது. எல்லா மாவட்டங்களிலும் தென்னை இருந்தாலும், தஞ்சாவூர், கன்னியாகுமரி, கோயம்புத்தூர் மாவட்டங்களில் முக்கியமாக உள்ளது. தர்மபுரி, சேலம் மாவட்டங்களில் ஆமணக்கு பயிரிடப்படுகிறது. சூரியகாந்தி ஒரு புதிய எண்ணெய் வித்துபயிராக பல இடங்களில் பயிரிடப்பட்டு வருகிறது.

தோட்டப்பயிர்கள் :

தமிழ்நாட்டில் பயிரிடப்படும் தோட்டப்பயிர்களில் முக்கியமானவை தேயிலை மற்றும் காப்பி பயிர்களாகும். தமிழ்நாட்டில் நீலகிரி மாவட்டத்தில் தேயிலை, காப்பி ஆகியன அதிக அளவில் பயிரிடப்படுகின்றன ஆனைமலை, கொடைக்கானல், ஏற்காடு ஆகிய மலைப்பகுதிகளிலும் பயிரிடப்படுகின்றன.

Sunday, December 04, 2011

சுதந்திரத்திற்குப் பாடுபட்ட தமிழக பத்திரிக்கைகள்

விடுதலைப் போராட்டத்தில் பத்திரிக்கைகளின் பங்கு முக்கியமானதாக இருந்தது அவ்வாறு முக்கிய பங்கு வகித்த சில தமிழக பத்திரிக்கைகளை இங்கு காணலாம்.

1) சுதேசமித்திரன் (1882)

2) சேலம் தேசவிமானி (1887)

3) ஸர்வஜன மித்திரன் (1889)

4) தமிழ் நேஷன் பத்திரிக்கை (1899)

5) இந்தியா (1906)

6) விஜயா (1909)

7) சூரியோதயம் (1908)

8) கர்மயோகி (1910)

9) கேசரி (1908)

10) நியாயபிமானி (1908)

11) தர்மம் (1910)

12) லோகோபகாரி (1911)

13) பிரபஞ்ச மித்திரன் (1916)

14) தேசபக்தன் (1917)

15) நவசக்தி (1926)

16) தமிழ்நாடு (1919)

17) இந்திய தேசாந்திரி (1919)

18) குமரன் (1921)

19) தேசசேவகன் (1922)

20) ஆத்மசக்தி (1923)

21) தாய்நாடு (1923)

22) ஸ்வராஜ்யா (1923)

23) தொழிலாளி (1923)

24) தேசபந்து (1925)

25) ஆனந்த விகடன் (1926)

26) இளந்தமிழன் (1928)

27) விமோசனம் (1929)

28) சுதந்திர சங்கு (1930)

29) காந்தி (1931)

30) இந்தியா (1931)

31) ஜெயபாரதி (1933)

32) சுதந்திரம் (1934)

33) தினமணி (1934)

34) ஜனசக்தி (1937)

35) பாரததேவி (1939)

36) சங்கநாதம் (1939)