Friday, May 18, 2012

உரிமை/கடமை/கட்டாயம்

"ஓட்டளிப்பது நமது உரிமை"
"ஓட்டளிப்பது நமது கடமை"
"ஓட்டளிப்பது நமது கட்டாயம்"

தேர்தலாணைய இணையதளத்திற்கு வழி தவறி வந்துவிட்டோமோ? என நினைக்க வேண்டாம்.
இவை நமது ஜனநாயக உரிமை/கடமை/கட்டாயமான ஓட்டை பெறுவதற்காக கட்சிகளும்,
தேர்தல் ஆணையமும் தேர்தல் காலங்களில் போடும் கூச்சல்கள்.
சரி இவ்வளவு சத்தமாக கூவுகிறார்களே, மேலும் எந்தவொரு செயலும் உரிமையாக
இருந்து கடமையாக மாறி பின்பு கட்டாயமாக்கப்பட்டதாக வரலாறு இல்லையே.
ஒருவேளை ஓட்டளிப்பது பெரிய மாற்றத்தை கொண்டுவந்துவிடுமோ? என்றெண்ணி,
ஓட்டளிப்பதால் என்ன பயன் என்று வினவினால், அவர்கள் கூறும் பதில்,

"ஜனநாயகம் காக்கப்படவேண்டும்"
"மக்களாட்சி மதிக்கப்படவேண்டும்"

இந்த பதிலை கேட்டவுடன் நமது ஆர்வம் பொசுங்கி விடுகிறது. ஏனென்றால், 60
வருடங்களாக ஜனநாயகத்தை காத்துவருகிறோம், மக்களாட்சியை மதித்து வருகிறோம்.
ஆனால் அந்த ஜனநாயகத்தால் அடித்தட்டு ஜனங்களை காக்க முடியவில்லை.
மக்களாட்சியால் மக்கள் வாழ்வில் மலர்ச்சியை கொண்டுவரமுடியவில்லை.

அப்படியானால், ஓட்டளித்தால் அனைத்தும் மாறிவிடும் என்று கூறுவது ஆளும்
வர்க்கத்தினால் ஏற்படுத்தப்படும் மாயை என்று எண்ணினால், உடனே 60 ஆண்டுகால
ஜனநாயகத்தால் பொருளாதாரம் உயரவில்லையா ? வறுமைக்கோட்டிற்கு மேலே மக்கள்
தூக்கிவிடப்படவில்லையா? என்று கேட்கிறார்கள். பொருளாதாரம்
உயர்ந்துவிட்டது ஆனால் அடித்தட்டு மக்களின் வாழ்க்கைத்தரம்
தாழ்ந்துவிட்டது. வறுமைக்கோட்டிற்கு மேலே மக்கள் ஏற்றப்பட்டுள்ளார்களா?
அல்லது மக்களுக்கு கீழே வறுமைக்கோடு தள்ளப்பட்டுள்ளதா?

சரி, ஓட்டால் பயன்பெறும் அரசியல்வாதிகள்தான் சுய இலாபத்தையே குறிக்கோளாய்
கொண்டு உள்ளனர். ஓட்டளிக்கும் நாம் சரியாக உள்ளோமா? என பார்த்தால் அது
மிக மோசமாக உள்ளது.
"நேற்று தந்தை விலையில்லா தொலைக்காட்சி வாங்கிய பொழுது முட்டாள்தனம் என்றேன்,
இன்று தாய் விலையில்லா மின்விசிறி வாங்கும் பொழுது ஏமாளித்தனம் என்றேன்,
ஆனால் நாளை எனக்கு வழங்கப்பட இருக்கும் விலையில்லா மடிக்கணினியை எண்ணி
மயக்கத்தில் இருக்கிறேன்."
இது தான் தற்பொழுதைய சமுதாய நிலைமை.

யாருக்கும் வாக்களிக்க விருப்பமில்லை என 49-O படிவத்தை பயன்படுத்தலாம் என
எண்ணினால், அந்த படிவத்தையும் எனக்கு மடிக்கணினி கொடுத்த ஆளும்
கட்சிகாரர்களும், 1000 ரூபாய் கொடுத்த எதிர்கட்சிகார்களும் கூடி உள்ள
இடத்திலே நின்று நிரப்ப வேண்டியுள்ளது. அந்த 49-O விருப்பத்தையாவது
ஓட்டளிக்கும் இயந்திரத்தில் வைக்க வேண்டுமென்று கேட்டால், மீண்டும் அதே
குரல்,

"ஜனநாயகம் காக்கப்பட வேண்டும்"
"மக்களாட்சி மதிக்கப்படவேண்டும்"

என்னால் என்ன சொல்லமுடியும் கீழ்கண்ட ஒன்றைத்தவிர,

"அவனவன் ஆயிரம் பிரச்சனைய வச்சுகிட்டு சந்தோஷமா இருக்கான். இந்த ஒரு ஓட்ட
வச்சுகிட்டு நான் படுற அவஸ்த இருக்கே ஐயய்யய்யோ...."

Thursday, May 17, 2012

தமிழ்மொழி வாழ்த்து

தமிழ்மொழி வாழ்த்து

வாழ்க நிரந்தரம் வாழ்க தமிழ்மொழி வாழிய வாழியவே

வானம் அளந்து அனைத்தும் அளந்திடும் வண்மொழி வாழியவே

ஏழ்கடல் வைப்பினும் தன்மணம் வீசி இசைகொண்டு வாழியவே

எங்கள் தமிழ்மொழி எங்கள் தமிழ்மொழி என்றென்றும் வாழியவே

சூழ்கலி நீங்கத் தமிழ்மொழி ஓங்கத் துலங்குக வையகமே

தொல்லை வினைதரு தொல்லை அகன்று சுடர்க தமிழ்நாடே

வாழ்க தமிழ்மொழி வாழ்க தமிழ்மொழி வாழ்க தமிழ்மொழியே

வானம் அறிந்தது அனைத்தும் அறிந்து வளர்மொழி வாழியவே

-பாரதியார்

இன்றைய கோடாங்கி

வல்லரசு பாரதம் இது! வல்லரசு பாரதம் இது!!
நாளொன்றுக்கு 32 ரூபாய் சம்பாதிக்கும் செல்வான்கள் வாழும் வல்லரசு பாரதம் இது!
GDPதான் ஏறுது! GDPதான் ஏறுது!! வாழ்க்கைத்தரம் தான் குறையுது! மக்களின்
வாழ்க்கைத்தரம் தான் குறையுது!!
IPL போட்டிகள் இரவிலேதான் நடக்குது ஒளி வெள்ளத்தில் மிதக்குது,
பாழா போன பிள்ளைகள் தான் முழிக்குது! இருட்டுல படிக்க முடியாம பள்ளிப்
பிள்ளைகள் தான் முழிக்குது!!
வல்லரசு பாரதம் இது! வல்லரசு பாரதம் இது!!
சாரயத்தத்தான் அரசு கொடுக்குது கல்விக்குத்தான் கைய விரிக்குது! இலவச
கல்விக்குத்தான் கைய விரிக்குது!!
திட்டத்துக்கு பணம் இல்ல அரசோட திட்டத்துக்கே பணம் இல்ல
ஆனாலும் கோடிக்கணக்கில பைக்குத்தான் போகுது! அரசியல்வாதிகள் பைக்குத்தான் போகுது!!
ஆறெல்லாம் ஓடுது ஆறெல்லாம் ஓடுது
தண்ணிதான் இல்லீங்க மணல் லாரிகளா ஓடுது! மணல் லாரிகளா ஓடுது!
இந்த பிரச்சனைக்கெல்லாம் முடிவை ஜக்கம்மா சொல்றா! ஜக்கம்மா சொல்றா!!
சிந்திக்க சொல்றா மக்களை சிந்திக்க சொல்றா
சிந்திக்க ஆரம்பிச்சா விடிவு வந்து பொறக்குமுனு
ஜக்கம்மா சொல்றா! ஜக்கம்மா சொல்றா!!

Tuesday, January 03, 2012

தமிழ் - செம்மொழி

பழம்பெரும் இலக்கண நூலான தொல்காப்பியத்தில் "செந்தமிழ் செம்மொழியாகிய தமிழ்" என்னும் சொல் இடம் பெற்றுள்ளது. சங்க நூலாகிய அகநானூறு செம்மொழி என்னும் சொல்லை நடுவுநிலை தவறாத மொழி எனும் பொருளில் ஆண்டுள்ளது.

ஆய்வியல் அறிஞராகிய கால்டுவெல் தாம் எழுதிய 'திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம்' என்ற நூலில் "திராவிட மொழிகள் அனைத்திலும் உயர்தனிச் செம்மொழியாய் நிலைபெற்று விளங்கும் தமிழ்" என்று தமிழ் மொழி செம்மொழியே என்று தெளிவுபடுத்தியுள்ளார்.


தமிழ்மொழி செம்மொழித் தகுதிபாட்டுத் சான்று ஆதாரங்கள் :

1) தொல் இலமூரியா காலத்தோடு தொடர்புடையது.

2) சந்த ஒலிச்சால்பு.

3) உலகளாவிய உணர்வுப் பெருமிதம்.

4) ஆரிய மொழிகளுக்கிடையே தலைநிமிரும் தமிழின் தரம்.

5) சொல்லமைப்பின் தொன்மையும் ஒலிச்சுருக்கமும்.

6) தமிழ்மொழியில் உள்ள 'அம்மா', 'அப்பா' என்கிற சொற்கள் பிற பழைமையான மொழிகளில் ஒத்த வடிவங்களில் உள்ளமை.

7) எழுவாய் வேற்றுமைக்குத் தனி விகுதியின்மை.

8) அடைமொழிகளி பிரிக்கத் தக்கவை -ஆழமுடைமை.

9) தமிழ்ச் சொற்களுக்குப் பாலினம் இல்லை.

10) தமிழில் ஒழுங்குமுறையற்ற சொற்கள் இல்லை.

11) தமிழ்மொழி தோன்றிய காலத்தைக் கண்டறிய இயலும்.

12) தமிழில் காணப்படும் சொற்கள் இயற்கையான காரணகாரிய தொடர்புடையவை.

13) ஒருமை, இருமை, பன்மை என்று வட மொழியில் இருக்க, தமிழில் ஒருமை, பன்மை என்று இரண்டைப் பொருத்தமாகக் கொண்டு இருத்தல்.

14) தமிழின் தனித்தன்மையும் - இயற்கைத் தன்மையும்.

15) உயர்ந்த இலக்கியத் தரமிகுந்த நூற்கோவைகள்.

இத்தகு சிறப்புடைய தமிழ் இன்றும் வாழும் மொழியாகவே உள்ளது.

Saturday, December 31, 2011

செம்மொழிக்கான தகுதிகள்

செம்மொழி என்பதற்குப் பொருளாக "செம்மைத் தன்மை வாய்ந்த மொழி" என்று கொள்ளலாம். செம்மைத் தன்மைப் பண்புகள் மிகுதியாக பெற்றுள்ள மொழியே செம்மொழியாகும். ஆங்கிலத்தில் இதனை Classical Language என்பர். செவ்வியல் மொழியே செம்மொழியாகக் குறிக்கப்படுகின்றது.


தமிழறிஞர் பரிதிமாற் கலைஞர், செம்மொழியாவது யாது? என்ற வினாவுக்கு விடையளிக்கும் போது, "திருந்திய பண்பும், சீர்த்த நாகரிகமும், பொருந்திய தூய மொழியே செம்மொழி" என்று கூறியுள்ளார்.


செவ்வியல் இலக்கியம் என்பதற்குப் பிரிட்டானியா தகவல் களஞ்சியம் பின்வருமாறு பொருள் கூறுகின்றது. "பண்டைய காலத்தின் உத்வேகம் கொண்டு பிற்காலத்தில் படைக்கப்பட்டவற்றை நவீன செவ்வியல் எனும் சொல் குறிக்கின்றது. மிக விரிந்த தளத்தில் செவ்வியல் என்பது நேர்த்தி, துல்லியம், எளிமை, கண்ணியம், கட்டுப்பாடு, ஒழுங்கு மற்றும் விகிதாசார அளவு உள்ளிட்ட நீடித்து நிற்பதும் உலகளாவியதுமான பண்புகளைப் பின்பற்றுவதாகும்"


முனைவர் கா.சிவதம்பி செம்மொழிக்கான பண்புகளாகத் தொன்மை, செழுமைவளம், தொடர்ச்சி என்ற மூன்றினை சுட்டுகின்றார்.

செம்மொழிக்குரிய அடிப்படைத் தகுதிகளாக 11 கூறுகளை மணவை முஸ்தபா உருவாக்கித் தந்துள்ளார் அவை பின்வருமாறு:

1) தொன்மை

2) பிறமொழித் தாக்கமில்லாத் தனித் தன்மை

3) தாயமைத்தன்மை

4) தனித்தன்மை

5) இலக்கியவளம், இலக்கணச் சிறப்பு

6) பொதுமைப் பண்பு

7) நடுவுநிலைமை

8) பண்பாடு, கலை, பட்டறிவு வெளிப்பாடு

9) உயர்சிந்தனை

10) கலை, இலக்கிய தனித் தன்மை வெளிப்பாடு

11) மொழிக் கோட்பாடு ஆகியன.


செம்மொழி எனும் தரத்தை வழங்கும் குழுவினர் மூன்று விதமான வரையறைகளை வகுத்துள்ளனர்

1) 1,550 முதல் 2,000ஆண்டுகள் வரையிலான தொன்மையான நூல்களைப் பெற்றிருத்தல் வேண்டும்

2) அம்மொழியைப் பயன்படுத்தும் பல தலைமுறையினர் பண்பாட்டுப் பாரம்பரியம் உடையதாகக் கருதும் இலக்கிய நூல்கள் இருத்தல் வேண்டும்.

3) அம்மொழிக்கே உரியதாகவும் மற்ற மொழிக் குடும்பத்திடமிருந்து கடன் பெறாததுமாக இருத்தல் வேண்டும்.

உயர்தனிச் செம்மொழி என்ற புதுவகை மொழிகளை உருவாக்குவதற்கு இந்திய அரசு 12.10.2004 அன்று அரசினுடைய அரசிதழில் ஆணை பிறப்பித்துள்ளது. உயர்தனிச் செம்மொழியாக வகைப்படுத்துவதற்குரிய தகுதிப்பாடுகளாகப் பின்வருமாறு நமது அரசு வரையறுக்கின்றது:

1) ஆயிரம் ஆண்டுகளுக்கு அதிகமான பழைமைப் படைப்புகள் பதிவான வரலாறு.

2) தொடர்ந்து வரும் பேச்சு வழக்கு, மைய தலைமுறையினரால் மதிப்புடையதாகக் கருதப்படும் வழிவந்த மரபுரிமையும் தொன்மையும் கொண்ட இலக்கியங்களும் படைப்புகளும்

3) பேச்சு வழக்குடைய மற்றெந்த இனத்திடமிருந்து வாங்காத தானே உருவான இலக்கிய மரபு.


மேற்கண்ட கருத்துக்கள் அனைத்தும் செம்மொழித்தகுதிகள் என அறிஞர்களால் வரையறுக்கப்பட்டுள்ளன.

Tuesday, December 20, 2011

தமிழின் முக்கிய இலக்கண நூல்கள்

1) அகத்தியம் - அகத்தியர்

2) தொல்காப்பியம் - தொல்காப்பியர்

3) இறையனார் களவியல் - இறையனார்

4) புறப்பொருள் வெண்பாமாலை - யனாரிதனார்

5) யாப்பருங்கலம் - அமிர்தசாகரனார்

6) யாப்பருங்கலக் காரிகை - அமிர்தசாகரனார்

7) வீரசோழியம் - புத்திமித்திரர்

8) நேமிநாதம் - குணவீரபண்டிதர்

9) தண்டியலங்காரம் - தண்டி

10) நன்னூல் - பவணந்தி முனிவர்

11) அகப்பொருள் - நம்பியகப் பொருள்

12) நவநீதப் பாட்டியல் - நவநீதநாடான்

13) சிரம்பரப் பாட்டியல் - மஞ்சோதியர்

14) மாறனலங்காரம் - மஞ்சோதியர்

15) மாறன் அகப்பொருள் - திருக்குருகைப் பெருமாள் கவிராயர்

16) சிதம்பரச் செய்யுட்கோவை - குமரகுருபரர்

17) பிரயோக விவேகம் - சுப்பிரமணிய தீட்சிதர்

18) இலக்கண விளக்கம் - வைத்தியநாத தேசிகர்

19) இலக்கண விளக்கச் சூறாவளி - சிவஞான முனிவர்

20) இலக்கண கொத்து - சாமிநாத தேசிகர்

21) தொன்னூல் விளக்கம் - வீரமாமுனிவர்

22) பிரபந்த தீபிகை - முத்து வேங்கட சுப்பையர்

23) முத்து வீரியம் - முத்துவீர உபாத்தியாயர்

24) சாமிநாதம் - சாமி கவியரசர்

25) காக்கைபாடினியம் - காக்கை பாடினியார்

26) வச்சனந்திமாலை - குணவீரத பண்டிதர்

Friday, December 09, 2011

தமிழகத்தின் வேளாண் பயிர்கள்

உணவுப் பயிர்கள்

நெல் :

தமிழக மக்களின் முக்கிய உணவுப் பயிராகவும் அதிக பரப்பில் பயிரிடப்படும் முக்கியமான பயிராகவும் நெல் உள்ளது. மொத்தம் பயிரிடப்படும் பரப்பில் மூன்றில் ஒரு பகுதியில் நெல் பயிரிடப்படுகிறது. காவிரி டெல்டா பகுதி நெல் சாகுபடிக்குப் புகழ் பெற்றதாகும். தஞ்சாவூர், திருவள்ளூர், மதுரை, விருதுநகர், இராமநாதபுரம், திருநெல்வேலி, தூத்துக்குடி, ஆகிய மாவட்டங்களில் நெல் அதிக அளவில் உற்பத்தி செய்யப்படுகிறது.

பிற தானியங்கள் :

தமிழ்நாட்டில் நெல்லுக்கு அடுத்தபடியாக சோளம், கம்பு மற்றும் கேழ்வரகு பரவலாக பயிரிடப்படுகின்றன. மேற்கு பகுதிகளில் குறிப்பாக கோயம்புத்தூர் பீடபூமி மற்றும் கம்பம் பள்ளத்தாக்குகளில் சோளம் அதிக அளவில் பயிரிடப்படுகிறது. தமிழ்நாட்டின் மூன்றாவது முக்கிய பயிரான கம்பு இராமநாதபுரம், திருநெல்வேலி, பெரம்பலூர், கரூர், சேலம் ஆகிய மாவட்டங்களில் பயிரிடப்படுகிறது. ராகி தர்மபுரி, வேலூர், கடலூர், கோயம்புத்தூர் ஆகிய மாவட்டங்களில் பயிரிடப்படுகிறது.

பருப்பு வகைகள் :

பருப்பு வகைகள் பயிரிடப்படும் பரப்பு தஞ்சாவூர் மற்றும் தர்மபுரி மாவட்டங்களில் மிகுதியாக உள்ளது. பருப்பு வகைகளின் உற்பத்தி தமிழகத்தின் தேவையை பூர்த்தி செய்து கொள்வதற்குப் போதுமானதாக இல்லை.

பணப் பயிர்கள் :

பருத்தி, கம்பு, எண்ணெய் வித்துகள் ஆகியன தமிழ்நாட்டின் முக்கியமான பணப்பயிர்களாகும். உணவுப் பொருளாக மட்டுமின்றி, தொழிற்சாலைகளின் தேவையைப் பூர்த்தி செய்து கொள்ளவும் பணப்பயிர்கள் பயிரிடப்படுகின்றன.

பருத்தி :

தமிழ்நாட்டில் கோயம்புத்தூர் பீடபூமி, வைகை - வைப்பாறு பகுதிகள் ஆகிய இரண்டு பகுதிகளில் பருத்தி முக்கிய பயிராக உள்ளது. கோயம்புத்தூர், மதுரை, விருதுநகர், திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களில் பெரும் பரப்பில் பருத்தி பயிரிடப்படுகின்றது.

கரும்பு :

தமிழ்நாட்டில் கடலூர், திருச்சி, திருவள்ளூர், காஞ்சிபுரம், ஈரோடு, வேலூர், கோயம்புத்தூர் ஆகிய மாவட்டங்களில் பெரும் பரப்பில் கரும்பு பயிரிடப்படுகிறது. இந்தியாவில் கரும்பு பயிரிடப்படும் மாநிலங்களில் தமிழ்நாட்டில் தான் மகசூல் அதிகமாக உள்ளது.

எண்ணெய் வித்துக்கள் :

நிலக்கடலை, எள், ஆமணக்கு, தேங்காய் ஆகியன தமிழ்நாட்டில் பயிரிடப்படும் முக்கியமான எண்ணெய் வித்துப் பயிராகும். வேலூர், திருவண்ணாமலை, விழுப்புரம், சேலம், புதுக்கோட்டை மாவட்டங்களில் நிலக்கடலை முக்கிய பயிராக உள்ளது. வந்தவாசி, திருவண்ணாமலை, செஞ்சி, ஆகிய பகுதிகளில் செறிவு அதிகம். தர்மபுரி, கடலூர், பெரம்பலூர், மதுரை ஆகிய மாவட்டங்களில் எள் முக்கிய பயிராக உள்ளது. எல்லா மாவட்டங்களிலும் தென்னை இருந்தாலும், தஞ்சாவூர், கன்னியாகுமரி, கோயம்புத்தூர் மாவட்டங்களில் முக்கியமாக உள்ளது. தர்மபுரி, சேலம் மாவட்டங்களில் ஆமணக்கு பயிரிடப்படுகிறது. சூரியகாந்தி ஒரு புதிய எண்ணெய் வித்துபயிராக பல இடங்களில் பயிரிடப்பட்டு வருகிறது.

தோட்டப்பயிர்கள் :

தமிழ்நாட்டில் பயிரிடப்படும் தோட்டப்பயிர்களில் முக்கியமானவை தேயிலை மற்றும் காப்பி பயிர்களாகும். தமிழ்நாட்டில் நீலகிரி மாவட்டத்தில் தேயிலை, காப்பி ஆகியன அதிக அளவில் பயிரிடப்படுகின்றன ஆனைமலை, கொடைக்கானல், ஏற்காடு ஆகிய மலைப்பகுதிகளிலும் பயிரிடப்படுகின்றன.