Saturday, December 31, 2011

செம்மொழிக்கான தகுதிகள்

செம்மொழி என்பதற்குப் பொருளாக "செம்மைத் தன்மை வாய்ந்த மொழி" என்று கொள்ளலாம். செம்மைத் தன்மைப் பண்புகள் மிகுதியாக பெற்றுள்ள மொழியே செம்மொழியாகும். ஆங்கிலத்தில் இதனை Classical Language என்பர். செவ்வியல் மொழியே செம்மொழியாகக் குறிக்கப்படுகின்றது.


தமிழறிஞர் பரிதிமாற் கலைஞர், செம்மொழியாவது யாது? என்ற வினாவுக்கு விடையளிக்கும் போது, "திருந்திய பண்பும், சீர்த்த நாகரிகமும், பொருந்திய தூய மொழியே செம்மொழி" என்று கூறியுள்ளார்.


செவ்வியல் இலக்கியம் என்பதற்குப் பிரிட்டானியா தகவல் களஞ்சியம் பின்வருமாறு பொருள் கூறுகின்றது. "பண்டைய காலத்தின் உத்வேகம் கொண்டு பிற்காலத்தில் படைக்கப்பட்டவற்றை நவீன செவ்வியல் எனும் சொல் குறிக்கின்றது. மிக விரிந்த தளத்தில் செவ்வியல் என்பது நேர்த்தி, துல்லியம், எளிமை, கண்ணியம், கட்டுப்பாடு, ஒழுங்கு மற்றும் விகிதாசார அளவு உள்ளிட்ட நீடித்து நிற்பதும் உலகளாவியதுமான பண்புகளைப் பின்பற்றுவதாகும்"


முனைவர் கா.சிவதம்பி செம்மொழிக்கான பண்புகளாகத் தொன்மை, செழுமைவளம், தொடர்ச்சி என்ற மூன்றினை சுட்டுகின்றார்.

செம்மொழிக்குரிய அடிப்படைத் தகுதிகளாக 11 கூறுகளை மணவை முஸ்தபா உருவாக்கித் தந்துள்ளார் அவை பின்வருமாறு:

1) தொன்மை

2) பிறமொழித் தாக்கமில்லாத் தனித் தன்மை

3) தாயமைத்தன்மை

4) தனித்தன்மை

5) இலக்கியவளம், இலக்கணச் சிறப்பு

6) பொதுமைப் பண்பு

7) நடுவுநிலைமை

8) பண்பாடு, கலை, பட்டறிவு வெளிப்பாடு

9) உயர்சிந்தனை

10) கலை, இலக்கிய தனித் தன்மை வெளிப்பாடு

11) மொழிக் கோட்பாடு ஆகியன.


செம்மொழி எனும் தரத்தை வழங்கும் குழுவினர் மூன்று விதமான வரையறைகளை வகுத்துள்ளனர்

1) 1,550 முதல் 2,000ஆண்டுகள் வரையிலான தொன்மையான நூல்களைப் பெற்றிருத்தல் வேண்டும்

2) அம்மொழியைப் பயன்படுத்தும் பல தலைமுறையினர் பண்பாட்டுப் பாரம்பரியம் உடையதாகக் கருதும் இலக்கிய நூல்கள் இருத்தல் வேண்டும்.

3) அம்மொழிக்கே உரியதாகவும் மற்ற மொழிக் குடும்பத்திடமிருந்து கடன் பெறாததுமாக இருத்தல் வேண்டும்.

உயர்தனிச் செம்மொழி என்ற புதுவகை மொழிகளை உருவாக்குவதற்கு இந்திய அரசு 12.10.2004 அன்று அரசினுடைய அரசிதழில் ஆணை பிறப்பித்துள்ளது. உயர்தனிச் செம்மொழியாக வகைப்படுத்துவதற்குரிய தகுதிப்பாடுகளாகப் பின்வருமாறு நமது அரசு வரையறுக்கின்றது:

1) ஆயிரம் ஆண்டுகளுக்கு அதிகமான பழைமைப் படைப்புகள் பதிவான வரலாறு.

2) தொடர்ந்து வரும் பேச்சு வழக்கு, மைய தலைமுறையினரால் மதிப்புடையதாகக் கருதப்படும் வழிவந்த மரபுரிமையும் தொன்மையும் கொண்ட இலக்கியங்களும் படைப்புகளும்

3) பேச்சு வழக்குடைய மற்றெந்த இனத்திடமிருந்து வாங்காத தானே உருவான இலக்கிய மரபு.


மேற்கண்ட கருத்துக்கள் அனைத்தும் செம்மொழித்தகுதிகள் என அறிஞர்களால் வரையறுக்கப்பட்டுள்ளன.

No comments:

Post a Comment