Thursday, November 24, 2011

தமிழக திரையுலகம்

1897 : எம். எட்வர்ட்ஸ் என்பவர் தென் இந்தியாவில் விக்டோரியா பப்ளிக் ஹாலில் முதல் சினிமாவை திரையிட்டார்.

1900 : தென்னிந்தியாவில் முதன்முதலில் மேஜர் வார்விக் என்பவரால் அண்ணா சாலையில் எலக்ட்ரிக் தியேட்டர் கட்டப்பட்டது.

1902 : சென்னையில் உள்ள அண்ணா சாலையில் கோஹன் என்பவரால் லிரிக் என்ற இரண்டாவது திரையரங்கம் ஆரம்பிக்கப்பட்டது.

1905 : சுவாமிகண்ணு வின்சென்ட் நிறுவிய எடிசன் சினிமாட்டோ கிராப் எனும் திரைப்படம் காட்டும் நிறுவனம் தென்னிந்தியாவின் டூரிங் டாக்கிஸ் ஆகும். பல ஊர்களுக்குச் சென்று இயேசுவின் வாழ்க்கை போன்ற குறும்படங்களைத் திரையிட்டார்.

1911 : நவம்பர் 11, 1911 அன்று ராஜா ஜார்ஜ்-5 அவர்களின் பதவி ஏற்பு மருதப்ப மூப்பனாரால் படம் எடுக்கப்பட்டு பின்பு சென்னையில் திரையிடப்பட்டது.

1914 : தென்னிந்தியாவில் திரை அரங்கத்தைக் (கெயிட்டி) கட்டிய முதல் இந்தியர் இரா. வெங்கையா ஆவார். எஸ்.எம். தர்மலிங்க முதலியார் மற்றும் நடராஜ முதலியார் இருவரும் இணைந்து தென்னிந்தியாவில் முதன்முதலில் சென்னையில் திரைப்படம் தயாரிக்க ஆரம்பித்தனர். நடராஜ முதலியார் தென்னிந்தியாவில் "கீசகவதம்" என்ற மெளனப் படத்தை முதன்முதலில் தயாரித்தார்.

1918 : இந்தியா சினிமாட்டோ கிராப் சட்டத்தின் மூலம் தணிக்கை முறை 1918ம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது.

1927 : ஏ. நாராயணன் தென்னிந்தியாவில் எக்ஸிபிடர் பிலிம் சர்வீஸஸ் என்ற முதல் பகிர்ந்தளிக்கும் வியாபார ஸ்தாபனத்தை தொடங்கினார்.

1929 : தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபையின் முன்னோடியான "தி மெட்ராஸ் பிலிம் லீக்" நிறுவப்பட்டது. வீராங்கி ராமாராவ் மற்றும் வி. சுந்தரேசன் இதன் செயலாளர்களாவர்.

1931 : எச்.எம். ரெட்டி இயக்கிய முதல் முழுநீள தமிழ்படமான காளிதாஸ் வெளிவந்தது. இதில் டி.பி. ராஜலஷ்மி முக்கிய கதாபாத்திரமாக நடித்துள்ளார்.

1934 : சீனிவாச சினிடோன் என்ற தென்னிந்தியாவில் முதல் டாக்கி ஸ்டுடியோ ஏ. நாராயணன் என்பவரால் நிறுவப்பட்டது. தென்னிந்தியாவில் தயாரிக்கப்பட்ட முதல் பேசும் படமான "சீனிவாச கல்யாணம்" ஏ. நாராயணன் என்பவரால் இயக்கப்பட்டது.

1935 : முதன்முதலில் சென்னையை அடுத்த வேலூரில் சுந்தரபாரதி ஸ்டுடியோ வஜ்ரவேலு என்பவரால் சத்துவாச்சாரி என்னும் இடத்தில் கட்டப்பட்டது.

1935 : சமகாலக் கதையைக் கொண்ட "கெளசல்யா" என்ற தமிழ் படம் முதன்முதலில் தென்னிந்தியாவில் வெளியிடப்பட்டது.

1935 : முதல் தமிழ் திரைப்பட பத்திரிக்கையான சினிமா உலகம் பி.எஸ். செப்பியாரை ஆசிரியராகக் கொண்டு வெளிவந்தது.

1936 : தென்னிந்தியாவின் பழமையான ஸ்டுடியோவான "மாடர்ன் தியேட்டர்" சேலத்தில் ஏற்படுத்தப்பட்டது.

1936 : தமிழில் பேசும் படம் இயக்கிய முதல் பெண்மணி மிஸ். கமலா இதனை வெளியிட்டவர் டி.பி. ராஜலஷ்மி.

1937 : ஒரே திரையரங்கில் ஒரு ஆண்டுக்கு மேல் ஓடிய முதல் தமிழ் படம் "சிந்தாமணி"

1939 : தென்னிந்தியாவில் முதன்முதல் "பிரேம்சாகர்" என்ற ஹிந்தி படம் கே. சுப்ரமணியம் என்பவரால் தயாரித்து இயக்கப்பட்டது.

1939 : தென்னிந்திய வர்த்தக சபை சென்னையில் நிறுவப்பட்டது. இதன் முதல் தலைவர் எஸ். சத்தியமூர்த்தி.

1940 : ஏ.கே. செட்டியார் தயாரித்து வெளிவந்த விவரணைப் படமான "மகாத்மா காந்தி" என்ற படத்தில் டி.கே. பட்டம்மாள் முதல் முதலில் பாடியுள்ளார்.

1940 : "சினி டெக்னீஷியன்ஸ் அசோஸியேஷன்" என்ற அமைப்பை தென்னிந்தியாவில் கே. ராம்னாத் என்பவர் நிறுவினார்.

1943 : ஹரிச்சந்திரா என்ற தமிழ்த் திரைப்படத்தை முதன்முதலில் கன்னட மொழியில் தயாரித்து வெளியிட்டவர் ஏ.வி. மெய்யப்ப செட்டியார் ஆவார். இதுதான் தென்னிந்தியாவில் தமிழ்த் திரைப்படத்தை வேறுமொழியில் வெளியிட்ட முதல் படமாகும்.

1944 : சென்னையில் "ஹரிதாஸ்" என்ற திரைப்படம் தொடர்ந்து 110 வாரம் ஓடிய திரைப் படமாகும்.

1947 : தென்னிந்தியாவில் முதன்முதலாக நட்சத்திர அந்தஸ்தைப் பெற்ற கே.பி. சுந்தராம்பாள் தமிழ்நாட்டு மேல் சபையில் உறுப்பினராக்கப் பட்டு, சட்டசபையில் நுழைந்த முதல் திரைப்படக் கலைஞர் என்ற சிறப்பையும் பெற்றவர்.

1952 : தென்னிந்தியாவில் தயாரிக்கப்பட்ட முதல் ஆங்கிலத் திரைப்படமான காடு (The Jungle) சீசர் ரொமாரோ, ராட் கேமரான், மேரி வின்ட்சர், மற்றும் மாடர்ன் தியேட்டர் கூட்டுடன் தயாரிக்கப்பட்டது.

1954 : "அந்தநாள்" என்ற படம் ஒரு பாடல் கூட இடம் பெறாமல் வெளிவந்த முதல் தமிழ்த் திரைப்படம் ஆகும்.

1955 : தென் இந்தியாவின் முதல் முழு நீள வண்ணப்படமான "அலிபாபவும் நாற்பது திருடர்களும்" மாடர்ன் தியேட்டரில் டி.ஆர். சுந்தரம் இயக்கிய படமாகும்.

1956 : "மெட்ராஸ் பிலிம் சொசைட்டி" என்ற அமைப்பை அம்மு சுவாமி நாதன் மற்றும் ராஜம்மாள் அனந்தராமன் நிறுவினர்.

1959 : திரைப்பட கலைஞர்களுக்கென "தமிழ் நடிகர் சங்கம்" என்ற அமைப்பு கே. சுப்ரமணியனால் நிறுவப்பட்டது.

1960 : சென்னையில் அடையாறில் திரைப்படக் கல்லூரி நிறுவப் பட்டது.

1967 : சென்னையில் பரங்கி மலைத் தொகுதியில் வெற்றி பெற்று எம்.எல்.ஏ ஆன முதல் திரைப்பட நடிகர் எம்.ஜி. இராமச்சந்திரன் ஆவார்.

1973 : தென்னிந்தியாவின் முதல் சினிமாஸ் கோப் தமிழ்த் திரைப்படம் "இராஜ ராஜ சோழன்"

1985 : தமிழில் வந்த முதல் முப்பரிமாண படம் "அன்னை பூமி"

1986 : 70 எம்.எம் இல் வெளிவந்த முதல் முப்பரிமாண தமிழ்த்திரைப்படம் "மாவீரன்".

Wednesday, November 23, 2011

தமிழக மண்வகைகள்

தமிழ்நாட்டில் செம்மண், கரிசல் மண், வண்டல் மண், துருக்கல் மண், உப்புமண் போன்ற மண் வகைகள் காணப்படுகின்றன.


செம்மண் :

செம்மண் மிக அதிக அளவில் சுமார் 5.9 மில்லியன் ஹெக்டேர் பரப்பில் காணப் படுகிறது. இது பெரும்பாலும் உள்நாட்டு மாவட்டங்களில் காணப் படுகிறது. நைட்ரஜன், தழைச்சத்து ஆகியன குறைவு. சுமாரான வளம் கொண்ட மண். இச்செம்மண் பரவலாக தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் காணப் படுகிறது.


கரிசல் மண் :

கரிசல் மண் பருத்திக்கு ஏற்ற மண்ணாக கருதப்படுகிறது. இது சுமார் 2.7 மில்லியன் ஹெக்டேர் பரப்பில் பரவி உள்ளது. இது களிமண் மற்றும் மணல் கலந்த மண் ஆகும். அலுமினியம், சுண்ணாம்பு, மெக்னீசியம் ஆகிய சத்துகள் இதில் அதிகம். நைட்ரஜன் மற்றும் பாஸ்பர அமிலம் ஆகிய சத்துகள் இம்மண்ணில் இல்லை. இக்கரிசல் மண் கோயம்புத்தூர், மதுரை, திண்டுக்கல், விருதுநகர், திருநெல்வேலி, தூத்துக்குடி போன்ற மாவட்டங்களில் காணப் படுகிறது.


வண்டல் மண் :

தமிழ்நாட்டின் வளம் மிகுந்த மண் வண்டல் மண்ணாகும். வண்டல் மண் கடற்கரை மற்றும் டெல்டாப் பகுதிகளில் காணப்படுகிறது. ஆற்று வண்டல் மண் கடற்கரைப் பகுதிகளில் உள்ளது. சுண்ணாம்பு, பொட்டாசியம், மெக்னீசியம், ஆகிய சத்துகள் இதில் அதிகம். இவ்வண்டல் மண் தஞ்சாவூர், நாகப்பட்டினம், திருச்சி, விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் காணப் படுகிறது.


துருக்கல் மண் :

மலைகள், குன்றுகளின் உச்சி மற்றும் சரிவுகளில் துருக்கல் மண் காணப் படுகிறது. இம்மண் நீலகிரி மாவட்டத்தின் சில பகுதிகளில் காணப் படுகிறது.


மணல் :

வடிகால் வசதி குறைவான பகுதியிலும், ஆவியாதல் அதிகமாக உள்ள பகுதிகளிலும் மணல் உள்ளது. தமிழகத்தில் கடற்கரையை ஒட்டிய பகுதிகளில் மணல் காணப் படுகிறது.

Tuesday, November 22, 2011

தமிழகத்தின் நீர்ப்பாசன முறைகள்

தமிழ்நாட்டின் மழைப் பொழிவு, வேறுபாடுகள் மிக்கதாகவும் நிச்சயமற்ற தன்மையோடும் பருவ அமைப்போடும் உள்ளது. ஆகவே வேளாண்மைக்குத் தேவையான நீர் தேவையான நேரத்தில் கிடைப்பது உறுதியில்லை. எனவே நீர்ப்பாசன வசதி முக்கியமானதாகின்றது. ஆற்று நீர் குறிப்பாக காவிரி மற்றும் தாமிரபரணி ஆறுகளில் நீண்ட காலமாக, நீர்ப் பாசனத்திற்குப் பயன்படுத்தப்பட்டு வருகிறது. கிணற்றுப் பாசனம், ஏரிப்பாசனம், கால்வாய்ப் பாசனம் ஆகியன முக்கியமான மூன்று நீர்ப்பாசன முறைகள் ஆகும்.


கிணற்றுப் பாசனம் :

இது ஒரு பழைய முறையாகும். கிணற்றுப் பாசனம் தமிழ்நாட்டின் மிக முக்கியமான நீர்ப்பாசன முறையாக உள்ளது. தமிழ்நாடு சுமார் 44% கிணற்றுப் பாசனம் பெறுகிறது. தமிழ்நாட்டின் மேற்குப் பகுதிகளிலும் வேலூர், மதுரை, விருதுநகர் மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களில் கிணற்றுப் பாசனம் முக்கியமாக உள்ளது.


ஏரிப் பாசனம் :

இந்தியாவில் ஏரிப்பாசனம் அதிக அளவில் நடைபெறும் மாநிலங்களில் தமிழ்நாடு ஒன்றாகும். தமிழ்நாட்டில் 39,000 ஏரிகள் உள்ளன. தமிழ்நாட்டில் நீர்ப்பாசனம் பெறும் பரப்பில் சுமார் 22% ஏரிப்பாசனத்தால் பயனடைகின்றது. வீராணம், மாமண்டூர், மதுராந்தகம், காவேரிப்பாக்கம், இராஜசிங்கமங்கலம், செம்பரம்பாக்கம் ஆகியன தமிழ்நாட்டின் சில பெரிய ஏரிகளாகும். தென் கிழக்குப் பகுதி (இராமநாதபுரம், விருதுநகர், திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்கள்) மற்றும் வடக்குப் பகுதி (காஞ்சிபுரம், திருவள்ளூர் மற்றும் வேலூர் மாவட்டங்கள்) ஆகிய இரு மாவட்டங்களில் ஏரிப்பாசனம் முக்கியமாக உள்ளது.


கால்வாய்ப் பாசனம் :

தமிழ்நாட்டின் நீர்ப்பாசனத்தின் பரப்பில் சுமார் 33% கால்வாய்ப் பாசனத்தால் பயன்பெறுகிறது. இதில் பாதியளவு தஞ்சாவூர், நாகப்பட்டினம், மாவட்டங்களில் உள்ளது. கோயம்புத்தூர், ஈரோடு, திருச்சி, கடலூர், மதுரை ஆகிய மாவட்டங்களில் கால்வாய்ப் பாசனம் முக்கியமானதாக உள்ளது. கால்வாய்களின் மூலம் பாசனவசதி அளிக்கும் முக்கியமான நீர்த் தேக்கங்கள் மேட்டூர், சாத்தனூர், பவானிசாகர், பரம்பிகுளம் ஆளியாறு, பெரியாறு, வைகை, அமராவதி, கிருஷ்ணகிரி ஆகியன ஆகும்.

தமிழகக் கனிம வளம்

தமிழ்நாட்டின் முக்கியமான கனிம வளங்கள் பழுப்பு நிலக்கரி, மேக்னசைட், சுண்ணாம்புக்கல், பாக்சைட், ஜிப்சம், உப்புகள் ஆகியன. தமிழ்நாட்டின் முக்கியமான கனிமவளம் பழுப்பு நிலக்கரி அல்லது லிக்னைட் ஆகும். இந்தியாவில் தமிழ்நாட்டில் மட்டும் தான் பெருமளவில் லிக்னைட் வெட்டியெடுக்கப்படுகிறது.


பழுப்பு நிலக்கரி :

தமிழகத்தில் லிக்னைட்டின் இருப்பு சுமார் 2500 மில்லியன் டன்களாகும். இது சுமார் 500ச.கி.மீ பரப்பில் பரவியுள்ளது. இது ஒரு முக்கியமான டெர்ஷியரி கால நிலக்கரி வயலாகும். முக்கியமான நிலக்கரிப் படுக்கைகள் கடலூரிலிருந்து சுமார் 40கி.மீ தொலைவில் அமைந்துள்ளன. கடலூர் மணற் பாறையில் 40மீ ஆழத்தில் பழுப்பு நிலக்கரி கிடைக்கிறது. ஆர்டீஷியன் ஊற்றுகள் இருப்பதால் நிலக்கரியை வெட்டி எடுப்பதில் பிரச்சனை ஏற்படுகிறது. ஆண்டு உற்பத்தி 12 மில்லியன் டன்களாகும். தமிழ்நாட்டின் சக்தி மற்றும் உரஉற்பத்திக்கு பழுப்பு நிலக்கரியின் பங்கு அதிக அளவில் உள்ளது.


சுண்ணாம்புக் கல் :

பழுப்பு நிலக்கரிக்கு அடுத்தபடியாக, சுண்ணாம்புக்கல் தமிழ்நாட்டின் முக்கியமான கனிம வளமாக இருக்கிறது. சிமெண்ட், உற்பத்திக்கு பயன்படுகின்ற இது பெரம்பலூர், கரூர், கோயம்புத்தூர், சேலம், இராமநாதபுரம், திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களில் பெருமளவு கிடைக்கிறது.


பாக்சைட் :

அலுமினியம் தயாரிக்கத் தேவையான பாக்சைட் படிவுகள் சேலம் மாவட்டத்தில் சேர்வராயன் மலைகளிலும், பெரம்பலூர், மாவட்டத்திலும் கொல்லிமலைப் பகுதிகளிலும் கிடைக்கின்றன.


ஜிப்சம் :

சிமெண்ட் மற்றும் உரங்கள் தயாரிக்கப் பயன்படும் ஜிப்சம் பெரம்பலூர், திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களில் கிடைக்கிறது


உப்பு :

கடற்கரைப் பகுதிகளில் உப்பு கிடைக்கிறது. வேதாரண்யம், தூத்துக்குடி பகுதிகளில் அதிகமாக உப்பு தயாரிக்கப்படுகிறது. சூரிய வெப்பத்தினால் ஆவியாக்கும் முறையில் உப்பு தயாரிக்கப்படுகிறது.


இரும்பு :

சேலம் மாவட்டத்திலுள்ள கஞ்ச மலைப் பகுதியில் இரும்புத் தாதுப் படிவுகள் உள்ளன. தமிழ்நாட்டிலுள்ள இரும்புத்தாது மேக்னசைட் வகையைச் சார்ந்தது. அதில் 30% முதல் 45% வரை இரும்பு உள்ளது. சிலிகா அதிகம். களிமண் படிவுகள் தமிழ்நாடு முழுவதும் கிடைக்கின்றன. பல பகுதிகளில் கிரானைட் கிடைக்கிறது. அவை உள்நாட்டில் பயன்படுத்தப்படுவதுடன் ஏற்றுமதிக்கும் பயன்படுகின்றது.


பெட்ரோலியம் :

தமிழ்நாட்டில் காவிரிப் படுக்கையில் பெட்ரோலியம் கிடைக்கிறது. 1984ம் ஆண்டு முதல் காவிரிப் பகுதிகளில் எண்ணெய்க் கிணறுகள் தோண்டப்பட்டு வருகின்றன. இதுவரை 100க்கும் மேற்பட்ட கிணறுகள் தோண்டப்பட்டு விட்டன. நரிமணம், கோவில் களப்பால், அடியக்கா மங்கலம், கமலாபுரம், புவனகிரி ஆகிய பகுதிகளில் பெட்ரோலியம் கிடைக்கிறது. பனங்குடி என்னுமிடத்தில் பெட்ரோலிய சுத்திகரிப்பு நிலையம் நிறுவப்பட்டுள்ளது.

Friday, November 18, 2011

தமிழ்நாட்டின் முக்கிய அணைகளும் நீர்த்தேக்கங்களும்

மழை காலத்தில் ஏற்படும் வெள்ளத்தில் மாண்டும், வெயில் காலத்தில் வெம்மையில் வெந்தும், வருந்துவது அஃறிணைகளுக்கு ஏற்றதாக இருக்கலாம். ஆனால் ஆறறிவு கொண்ட மனிதனுக்கு ஏற்ற செயல் இல்லை என்பதை உணர்ந்த தமிழக முன்னோர்கள் ஆதி காலத்திலிருந்தே அணைகளை கட்டி உலகுக்கு வழி காட்டியுள்ளனர். அவ்வாறு தமிழினத்தைக் காக்கும் சில அணைகளை இங்கு காண்போம்.

சேலம் : மேட்டூர் அணை, வசிட்டா அணை

தருமபுரி : தொப்பையாறு நீர்த்தேக்கம், நாகாவதி நீர்த்தேக்கம், பாம்பாறு நீர்த்தேக்கம், கெலவரப்பள்ளி நீர்த்தேக்கம், கேசரளிகுல்லா நீர்த்தேக்கம், பஞ்சப்பள்ளி நீர்த்தேக்கம், வாணியாறு நீர்த்தேக்கம், ஈச்சம்பாடி நீர்த்தேக்கம்,

திருவண்ணாமலை : சாத்தனூர் அணை

விழுப்புரம் : மணிமுத்தாறு அணை, கோமுகி, வீடுர் நீர்த்தேக்கம்

ஈரோடு : பவானிசாகர் அணை,
வரட்டுப் பள்ளம், குண்டேரிப்பள்ளம், கொடிவேரி ஓரத்துப்பள்ளம், உப்பாறு நீர்த்தேக்கம் .


நீலகிரி : அவலாஞ்சி, எமரால்டு, கிளன்மார்க்கன், குந்தா, சாண்டிநல்லா, பார்சன்ஸ்வேலி , பைக்காரா, போர்த்திமந்து, மரவகண்டி, முக்குருத்தி, மேல்பவானி

கோயம்புத்தூர் : அமராவதி, சின்னாறு நீர்த்தேக்கம், பரம்பிக்குளம், ஆளியாறு, திருமூர்த்தி

தஞ்சாவூர் : கல்லணை

மதுரை : வைகை அணை

தேனி : மஞ்சளாறு அணை, வைகை அணை

விருதுநகர் : பிளவக்கல் அணை

திருநெல்வேலி : பாபநாசம், கடனாநதி நீர்த்தேக்கம், இராமா நதி நீர்த்தேக்கம், கருப்பா நதி நீர்த்தேக்கம், சேர்வலாறு அணை, குண்டாறு, மணிமுத்தாறு

கன்னியாகுமரி : பேச்சிப்பாறை அணை

சென்னை : புழல் நீர்த்தேக்கம் .


சுமார் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு வெறும் கல்லையும், களிமண்ணையும் கலந்து கரிகாலன் கட்டிய கல்லணை காலத்தை வென்று நிற்பது தமிழர்களின் கட்டடக்கலைக்கு சிறந்த எடுத்துக்காட்டாகும். அப்படிப்பட்ட தமிழர்களால் கட்டப்பட்ட (ஆங்கில தொழில்நுட்பம் கொண்டு) அணை நூறு ஆண்டுகளில் பலமிழந்து விட்டதென்றும், ஒரு அடி ஏற்றினால் மொத்த அடியும் சரியும் என்றும் நமது அருகில் வாழும் சகோதரர்கள் கவலைப்படுகிறார்கள். அவர்களது கவலையையும், நமது தாகத்தையும், நீதி தேவதையின் கரங்களில் சமர்பித்துவிட்டு, அணைகளை காப்பதற்கான தனிமனித பங்களிப்பை காண்போம் .

முன்பெல்லாம் மாதம் மும்மாரி பொழிந்தாலும் நிறையாத தமிழக அணைகள், தற்பொழுதெல்லாம் தூறலுக்கே நிறைந்து விடுகின்றன. அதற்குரிய முக்கிய இருகாரணங்கள் பராமரிப்பு இன்மையும், ஆக்கிரமிப்புகளுமே ஆகும். அணை என்பது பள்ளமாக இருக்குமா? அல்லது மேடாக இருக்குமா? என இளைய சந்ததியினர் சந்தேகப்படும் அளவிற்கு அணைகளை தூர்வாராமல் தனது பொறுப்பை தட்டிக்கழிக்கிறது அரசு. அதுமட்டுமல்லாமல் அவ்வணைகளை ஆக்கிரமிப்பாளர்களிடமிருந்து காப்பதும் இல்லை. கடலாக இருந்த அணைகலெல்லாம் தற்பொழுது குட்டையாகி விட்டன. சில அரசு அதிகாரிகளும் தங்கள் பங்கிற்கு பணம் பெற்றுக்கொண்டு அவ்வாக்கிரமிப்பு கட்டிடங்களுக்கு குடிநீர் மற்றும் மின் இணைப்பும் கொடுத்துவிடுகின்றனர். எனவே நமது தனிப்பட்ட அளவில் அணைகளை காப்பதற்காக குறைந்தபட்சமாக அணைகளை ஆக்கிரமிக்காமலும், போலி நில முகவர்களிடம் ஏமாறாமலும் இருப்போம் .

Thursday, November 17, 2011

தமிழ்நாடு - முதன்மைகள்

குடியரசு தலைவரான முதல் தமிழர் : டாக்டர்.எஸ். இராதகிருஷ்ணன்

துணைக் குடியரசுத் தலைவரான முதல் தமிழர் : டாக்டர்.எஸ். இராதகிருஷ்ணன்

முதல் பெண் நீதிபதி : பத்மினி ஜேசுதுரை

முதல் பெண் மருத்துவர் : டாக்டர். முத்துலட்சுமி ரெட்டி

முதல் பெண் ஆளுநர் : பாத்திமா பீவி

முதல் பெண் முதலமைச்சர் : ஜானகி இராமச்சந்திரன்

முதல் பெண் தலைமைச் செயலாளர் : லட்சுமி பிரானேஷ்

முதல் பெண் கமாண்டோ : காளியம்மாள்

முதல் நாளிதழ் : மதராஸ் மெயில் (1873)

முதல் தமிழ் நாளிதழ் : சுதேசமித்திரன் (1829)

முதல் வானொலி நிலையம் : சென்னை (1930)

முதல் இருப்புப்பாதை : ராயபுரம் - வாலாஜா (1856)

முதல் வணிக வங்கி : மதராஸ் வங்கி (1831)

முதல் மாநகராட்சி : சென்னை (29-09 -1688)

காங்கிரஸ் கட்சியில் தலைவராக பதவி வகித்த முதல் தமிழர் : விஜயராகவாச்சாரியார்

சுதந்திரந்திரத்திற்குப்பின் காங்கிரஸ் தலைவராய் இருந்த முதல் தமிழர் : காமராசர்

தமிழகத்தின் முதல் முதலமைச்சர் : அ.சுப்பராயலு ரெட்டியார்

சென்னை மாநகராட்சியின் முதல் மேயர் : சர்.ராஜா முத்தையா செட்டியார்

சென்னை மாநகராட்சியின் முதல் துணை மேயர் : எம்.பக்தவச்சலம்

சென்னை மாநகராட்சியின் முதல் பெண் மேயர் : தாரா. செரியன்

சென்னை மாநகராட்சியின் முதல் பெண் துணை மேயர் : அகல்யா சந்தானம்

தமிழகத்தின் முதல் பெண் திரைப்பட நட்சத்திரம் : டி.பி. ராஜலட்சுமி

உலக சாம்பியனான முதல் தமிழக சதுரங்க வீராங்கனை : ஆர்த்தி இராமசாமி

நோபல் பரிசு பெற்ற முதல் தமிழர் : சர்.சி.வி. இராமன்

கிராண்ட் மாஸ்டர் பட்டம் வென்ற முதல் தமிழக சதுரங்க வீராங்கனை : எஸ். விஜயலட்சுமி

தமிழகத்தின் முதல் பெண் பேருந்து ஓட்டுநர் : வசந்தகுமாரி

தமிழ்நாட்டின் முதல் ஊமைப்படம் : கீசகவதம் (1916)

தமிழ்நாட்டின் முதல் பேசும்படம் : காளிதாஸ் (1931)

தமிழக மேலவைத் தலைவர்கள்

1) பி. இராஜ கோபாலச் சாரியார் (1920-23)

2) எல்.டி. சுவாமிக்கண்ணு பிள்ளை (1923-25)

3) எம். ரத்தினசாமி (1925-26)

4) சி.வி. நரசிம்ம ராஜீ (1926-30)

5) பி. இராமச்சந்திரா ரெட்டி (1930-37)

6) டாக்டர்.யு. ராமாராவ் (1937-1946)

7) ஆர்.பி. இராமகிருஷ்ண ராஜீ (1946-52)

8) பி.வி. செரியன் (1952-64)

9) எம்.ஏ. மாணிக்க வேலு (1964-70)

10) சி.பி. சிற்றரசு (1970-76)

11) ம.பொ. சிவஞானம் (1976-86)


1986ல் மேலவை கலைக்கப்பட்டது.

தமிழக பேரவைத் தலைவர்கள் (சபாநாயகர்கள்)

1) புலுசு சம்பாமூர்த்தி (1937-42)

2) ஜே. சிவசண்முகம் பிள்ளை (1942-55)

3) என். கோபால மேனன் (1955-56)

4) யு. கிருஷ்ணராவ் (1957-61)

5) எஸ். செல்லபாண்டியன் (1962-67)

6) சி.பா. ஆதித்தனார் (1967-68)

7) புலவர் க. கோவிந்தன் (1969-71)

8) கே.ஏ. மதியழகன் (1971-72)

9) முனு ஆதி (1977-80)

10) க. இராசாராம் (1980-85)

11) பி.எச். பாண்டியன் (1985-89)

12) மு. தமிழ்க் குடிமகன் (1989-91)

13) சேடபட்டி முத்தையா (1991-96)

14) பி.டி.ஆர். பழனிவேல் ராஜன் (1996-2001)

15) காளிமுத்து (2001-2006)

16) இரா. ஆவுடையப்பன் (2006-2011)

17) ஜெயக்குமார் (2011 முதல் . . . )

Wednesday, November 16, 2011

தமிழக முதலமைச்சர்கள்

1) அ. சுப்பராயுலு ரெட்டியார் (1920-21)

2) பனகல் ராஜா (1921-23) (1923-26)

3) பி. சுப்பராயன் (1926-30)

4) பி. முனுசாமி நாயுடு (1930-32)

5) பொப்பிலி ராஜா (1932-37)

6) பி.டி. இராசன் (1936 : ஏப்ரல் -ஆகஸ்ட் )

7) கே.வி. ரெட்டி நாயுடு (1937: ஏப்ரல் - ஜீலை )

8) சி.இராஜ கோபலச்சாரியார் (1937-39)

9) டி.பிரகாசம் (1946-47)

10) ஒ.பி. இராமசாமி ரெட்டியார் (1947-49)

11) பி.எஸ். குமாரசாமி ராஜா (1949-52)

12) சி. இராஜ கோபாலச்சாரியார் (1952-54)

13) கு. காமராஜர் (1954-57) (1957-63)

14) எம். பக்தவச்சலம் (1963-67)

15) சி.என். அண்ணாத்துரை (1967-69)

16) மு. கருணாநிதி (1969-71) (1971-76)

17) எம்.ஜி. இராமச்சந்திரன் (1977-80) (1980-84) (1985-87)

18) திருமதி. ஜானகிராமச்சந்திரன் (1988: ஜனவரி 7-30)

19) மு. கருணாநிதி (1989-91)

20) ஜெ. ஜெயலலிதா (1991-96)

21) மு. கருணாநிதி (1996-2001)

22) ஜெ. ஜெயலலிதா (14.05.2001 - 21.09.2001)

23) ஓ. பன்னீர் செல்வம் (21.09.2001 - 24.02.2002)

24) ஜெ. ஜெயலலிதா (02.03.2002 - 10.05.2006)

25) மு. கருணாநிதி (11.05.2006 - 13.05.2011)

26) ஜெ. ஜெயலலிதா (16.05.2011 முதல்.....)

தமிழகத்தின் ஆளூநர்கள்

1801 முதல் தமிழக ஆளுநராக இருந்தவர்களது பெயர்ப்பட்டியல் இங்கே கொடுக்கப்பட்டுள்ளது. மொழிவாரி மாநிலங்கள் பிரிக்கப்படும் வரை, தமிழகம் மதராஸ் மாகாணத்தின் பகுதியாக இருந்தது. மேலும், அப்போதைய மதராஸ் மாகாணத்தில் ஆந்திரப்பிரதேசமும் கர்நாடகத்தின் சில பகுதிகளும் அடங்கியிருந்தன.

1) இராபர்ட் கிளைவ் பிரபு (1798-1803)

2) W.C.பெண்டிங் பிரபு (1803-1807)

3) வில்லியம் பெட்ரி (1807)

4) சர் ஜார்ஜ் ஹிலேரி பார்லோ (1807-1813)

5) ஜான் ஆபர் குரோம்பி (1813-1814)

6) ஹங் எலியட் (1814-1820)

7) சர் தாமஸ் மன்றோ (1820)

8) ஹென்றி சலிவன் கிரேம் (1827)

9) ஸ்டீபன் ரம்போல்டு லூஷிங்டன் (1827-1832)

10) சர் பிரடெரிக் ஆடம் (1832-37)

11) ஜார்ஜ் எட்வர்ட்ஸில் (1837)

12) எல்பின்ஸ்ட்ன் பிரபு (1837-42)

13) டுவீடேல் பிரபு (1842-48)

14) ஹென்றி டிக்கின்ஸன் (1848)

15) சர்ஹென்றி போட்டிங்கர் (1848-54)

16) டேனியல் எலியட் (1854)

17) ஹாரிஸ் பிரபு (1854-59)

18) சர்.C.E. டிரெவெலியன் (1859-60)

19) W.A.மோர்வேண்ட் (1860)

20) சர். ஹென்றி ஜார்ஜ் வார்டு (1860)

21) W.A.மோர்லாண்டு (1860-61)

22) சர்.W.T டென்சன் (1861-63)

23) எட்வர்டு மாட்பி (1863-66)

24) நேப்பியர் பிரபு (1866-72)

25) A.J.ஆர்பத்நாட் (1872)

26) ஹோபார்ட் பிரபு (1872-75)

27) W.R.இராபின்சன் (1875)

28) பக்கிங்காம் கோமகன் (1875-80)

29) W.பாட்ரிக் ஆடம் (1880-81)

30) W.ஹடுல்ஸ்டன் (1881)

31) மவுண்ட் ஸ்டுவர்ட் எல்மிஸ்டன் கிராண்ட்டஃப் (1881-86)

32) இராபர்ட் போர்க் (1886-90)

33) J.H.கார்ஸ்டின் (1890-91)

34) பென்லாக் பிரபு (1891-96)

35) சர்.A.P. ஹேவ்லாக் (1896-1900)

36) A.O.வில்லியர்ஸ் (1900-1904)

37) சர். ஜேம்ஸ் தாம்சன் (1904)

38) A.O. வில்லியர்ஸ் (1904-1906)

39) சர்.ஆர்தர் லாலி (1906-1911)

40) சர்.T.D. சிப்சன் கார்மெக்கேல் (1911-12)

41) சர். மர்ரே ஹாம்மிக் (1912)

42) பெண்ட் லாண்ட் பிரபு (1912-19)

43) சர். அலெக்ஸாண்டர் கார்டியூ (1919)

44) வில்லிங்டன் பிரபு (1919)

45) சர். ப்ரிமேன் தாமஸ் (1919-1924)

46) சர். சார்லஸ் டோடுண்டர் (1924)

47) சர். சார்ஜ் கோசின் (1924-1929)

48) சர்.N.E. மார்ஜோரிபாங்க்ஸ் (1929)

49) சர்.G.E. ஸ்டான்லி (1929-1934)

50) சர். முகமது உஸ்மான் (1934)

51) சர்.C.F. ஸ்டான்லி (1934)

52) J.F.A. எர்ஸ்கின் பிரபு (1934-36)

53) சர். குமாரவெங்கடா ரெட்டிநாயுடு (1936)

54) J.F.A. எர்ஸ்கின் பிரபு (1936-40)

55) சர்.A.O. ஜேம்ஸ்ஹோப் (1940-46)

56) சர். ஹென்றி ஃபோலிநைட் (1946)

57) சர்.A. எட்வர்ட் நை (1946-48)

58) பவநகர் மகாராஜா (1948-52)

59) திரு. பிரகாசா (1952-56)

60) திரு.A.J. ஜான் (1956-57)

61) P.V. ராஜ மன்னர் (1957-58)

62) திரு. விஷ்ணுராம் மூர்த்தி (1958-64)

63) மகாராஜர் ஜெயசாமராஜ உடையார் (1964-66)

64) திரு. சந்திரா ரெட்டி (1966)

65) சர்தார் உஜ்ஜல்சிங் (1966-71)

66) திரு.K.K. ஷா (1971-76)

67) திரு. மோகன்லால் சுகாதியா (1976-77)

68) திரு. சந்தரேஷ்வர் பிரசாத் நாராயண் சிங் (1977)

69) திரு. பிரபுதாஸ் பாலுபாபட்வாரி (1977-1980)

70) திரு. இஸ்மாயில் (1980)

71) சாதிக் அலி (1980-82)

72) சுந்தர்லால் குரானா (1982-88)

73) பி.சி. அலெக்ஸாண்டர் (1988-90)

74) சுர்ஜித்சிங் பர்னாலா (1990-91)

75) பீஷ்ம நாராயண் சிங் (1991-93)

76) டாக்டர். எம். சென்னா ரெட்டி (1993-96)

77) கிருஷ்ணகாந்த் (தற்காலிகம்) (1996-97)

78) செல்வி. எம். பாத்திமா பீவி (1997-2001)

79) சி. ரங்கராஜன் (தற்காலிகம்) (03.07.2001) முதல் (17.01.2002) வரை

80) பி.எஸ். ராம்மோகன் ராவ் (18.01.2002) முதல் (02.11.2004) வரை

81) சுர்ஜித்சிங் பர்னாலா (03.11.2004) முதல் (31.08.2011) வரை

82) திரு.ரோசய்யா (01.09.2011 முதல் தொடர்கிறார்...)

Tuesday, November 15, 2011

தமிழ்நாட்டில் ஓடும் முக்கியமான ஆறுகள்

மனித குலத்தின் உயிர்நாடியாக இருப்பது விவசாயம். அந்த விவசாயத்தின் உயிர் நாடியாக இருப்பது ஆறுகள். அந்தவகையில் தமிழகத்தை உயிர்ப்புடன் வைத்திருக்கும் சில முக்கிய ஆறுகளை இங்கு காண்போம்.

சென்னை :
கூவம், அடையாறு, பக்கிங்காம் கால்வாய், ஓட்டேரி கால்வாய்கள்.

கடலூர் :
தென் பெண்ணை, கெடிலம்.

விழுப்புரம் :
கோமுகி.

காஞ்சிபுரம் :
அடையாறு, செய்யாறு, பாலாறு.

திருவண்ணாமலை :
தென் பெண்ணை, செய்யாறு.

திருவள்ளூர் :
கூவம், கொடுதலையாறு, ஆரணியாறு.

கரூர் :
அமராவதி.

திருச்சி :
காவேரி, கொள்ளிடம்.

பெரம்பலூர் :
கொள்ளிடம்

தஞ்சாவூர் :
வெட்டாறு, வெண்ணாறு, கொள்ளிடம், காவேரி.

சிவகங்கை : வைகையாறு.

திருவாரூர் :
பாமணியாறு, குடமுருட்டி.

நாகப்பட்டினம் :
வெண்ணாறு, காவேரி.

தூத்துக்குடி :
ஜம்பு நதி, மணிமுத்தாறு, தாமிரபரணி.

தேனி :
வைகையாறு.

கோவை :
சிறுவாணி, அமராவதி.

திருநெல்வேலி :
தாமிரபரணி.

மதுரை :
பெரியாறு,
வைகை.

திண்டுக்கல் :
பரப்பலாறு, வரதமா நதி, மருதா நதி.

கன்னியாகுமரி :
கோதையாறு, பறளியாறு, பழையாறு.

இராமநாதபுரம் :
குண்டாறு, வைகை.

தருமபுரி :
தொப்பையாறு, தென்பெண்ணை, காவேரி.

சேலம் :
வசிட்டா நதி, காவேரி.

விருதுநகர் :
கெளசிகாறு, வைப்பாறு, குண்டாறு, அர்ஜீனாறு.

நாமக்கல் :
உப்பாறு, நொய்யல், காவேரி.

ஈரோடு :
பவானி, காவேரி.

தமிழகத்தில் ஓடும் பல பெரிய ஆறுகள் அண்டை மாநிலங்களில் உற்பத்தியாவதால் அவற்றின் மீதான நமது உரிமையை பெற போராட வேண்டியுள்ளது. பயிர்கள் வெயில் காலத்தில் கருகியும் மழைகாலத்தில் மூழ்கியும் அழிகின்றன. அப்போராட்டங்களை தொடர்ந்து கொண்டே நமது தமிழ்நாட்டில் உற்பத்தியாகும் சிறு ஆறுகளை ஒன்றிணைப்பதற்கான சாத்தியங்களை ஆராய்ந்து செயல்படுத்தினால் நீதிமன்ற வாசல்களில் காத்திருக்கும் நமது பயிர்களின் மரண ஓலம் சிங்கத்தின் கர்ஜனையாய் மாறி வெற்றி தேடித்தரும்.

Monday, November 14, 2011

தமிழக வரலாறு: பாகம்-4

சுதந்திர போராட்டம்:

19ஆம் நூற்றாண்டில் அகில இந்தியாவில் ஏற்பட்டது போல் தமிழகத்திலும் தேசிய உணர்வு தலை தூக்கியது. மதராசு மகாஜன சபை இந்திய தேசியக் காங்கிரஸ் உருவாக முன்னோடியாக அமைந்தது. 1885ல் இந்திய தேசிய காங்கிரஸ் பம்பாயில் கூடுவதற்கான துவக்க பணிகள் சென்னையில் தான் நடைபெற்றன. தேசிய விடுதலை இயக்கத்தில் ஈடுபட்டவர்களில் வ.உ.சிதம்பரனார் (1872-1936) ஆங்கிலக் கம்பெனிக்கு எதிராக சுதேசி கப்பல் கழகம் ஒன்றை உருவாக்கினார். மகாகவி சுப்பிரமணிய பாரதியார் (1882-1921) எளிய தமிழில் விடுதலை வேட்கைப் பாடல்களை இயற்றியும் பாடியும் மக்கள் மனதில் தேசிய உணர்வினை பதித்தார். புரட்சிவாதிகளான வ.வே.சு. ஐயர், நீலகண்ட பிரம்மச்சாரி போன்றவர்கள் வன்முறை புரட்சி மூலம் விடுதலை பெற முயன்றனர். வாஞ்சிநாதன் என்ற இளைஞர் 1911ல் திருநெல்வேலி ஆட்சித் தலைவர் ஆஷ் என்பவரை மணியாச்சிப் புகைவண்டி நிலையத்தில் சுட்டுக் கொன்றார். இந்து, சுதேசமித்திரன், இந்தியா, ஆந்திரப் பிரகாசிகா போன்ற பத்திரிக்கைகளும் விடுதலை உணர்வை தூண்டின. 1916-18ல் சென்னையில் அன்னிபெசன்ட் அம்மையார் தன்னாட்சி இயக்கத்தை நடத்தினார்.

காந்திய சகாப்தத்தில் 1920ல் நடைபெற்ற ஒத்துழையாமை இயக்கம், 1930ல் நடந்த சட்டமறுப்பு இயக்கம், 1942ல் நடந்த வெள்ளையனே வெளியேறு இயக்கம் ஆகியவற்றிலும் தமிழ்நாடு பெரும்பங்கு எடுத்துக் கொண்டது. காந்திஜியின் தண்டியாத்திரையின் போது தமிழகத்தில் சி.ராஜகோபாலச்சாரியார் திருச்சியிலிருந்து வேதாரண்யம் வரை பாதயாத்திரை சென்று உப்புச் சட்டங்களை மீறினார். 1932ல் கொடிப் போராட்டத்தில் திருப்பூர் குமரன் கலந்து கொண்டு உயிர்த்தியாகம் செய்தார்.

நீதிக்கட்சி:

இந்தக் காலகட்டத்தில் தான் சென்னை மாநிலத்தில் பிராமணரல்லாதார் இயக்கம் ஒன்று உருவாக்கப்பட்டது. இதுவே பின்னர் காங்கிரசுக்கு எதிரான நீதிக்கட்சியாக வளர்ந்தது. இக்கட்சி 1920 முதல் 1937 வரை இடையில் மூன்று ஆண்டுகள் தவிர்த்து மாநில ஆட்சிப் பொறுப்பில் இருந்தது. 1920ல் இக்கட்சியைச் சேர்ந்த ஏ.சுப்புராயலு என்பவர் மாநில பிரதம அமைச்சராகப் பொறுப்பேற்றார். இவரைத்தொடர்ந்து பனகல் அரசர், முனுசாமி நாயுடு, பொப்பிலி அரசர் ஆகியோர் பிரதம அமைச்சர்களாக இருந்தனர். இடையில் 1926-30களில் ஜமீன்தார் சுப்பராயன் தலைமையில் சுயேட்சை அரசு செயல்பட்டது. நீதிக்கட்சியின் ஆட்சிக் காலத்தில் ஆந்திரப் பல்கலைக் கழகமும், அண்ணாமலை பல்கலைக் கழகமும் துவக்கப்பட்டன. வகுப்புவாரிப் பிரதிநிதித்துவத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது.இந்து அற நிலைய நிர்வாக குழு அமைக்கப்பட்டது. இந்தியாவிலேயே முதன்முதலாக அரசுப் பணியாளர் தேர்வுக்குழு அமைக்கப்பட்டது. 1937ல் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் பெருவாரியான இடங்களை பெற்று ஆட்சிக்கு வந்தது. இராஜஜி அதன் முதல் பிரதம அமைச்சரானார். மதுவிலக்கு அமல்படுத்தப்பட்டது. ஆலய நுழைவுச் சட்டம், விவசாயி கடன் நிவாரணச் சட்டம் கொண்டு வரப்பட்டது. இந்தி கட்டாயப் பாடம் ஆக்கப்பட்டது. கட்டாய இந்தியை எதிர்த்து போராட்டங்கள் வெடித்தன. 1954-56ல் மொழிவாரி மாநிலங்கள் உருவாக்கப்பட்ட போது இன்றைய தமிழகம் மதராஸ் மாநிலமாக்கப்பட்டு, பின் 1967 ஜீலை 18ல் தமிழ்நாடு ஆனது.


**முடிந்தது**

சங்க காலம் முதல் சுதந்திர காலம் வரையிலான, தமிழகத்தின் வரலாறு தொடர்பான கட்டுரை தொகுப்புகள் இத்துடன் முடிவுற்றன. தமிழகத்தின் சிறப்புகள் தொடர்பான அடுத்த கட்டுரையில் சந்திப்போம்.

Tuesday, November 08, 2011

தமிழக வரலாறு: பாகம்-3

நாயக்கர்கள்:

விஜயநகர ஆளுநர்கள் நாயக்க வம்சங்களை உருவாக்கினார். 1526ல் வையப்ப நாயக்கர் தலைமையில் செஞ்சி நாயக்கர் அரசும், 1529ல் விசுவநாத நாயக்கர் தலைமையில் மதுரை நாயக்கர் அரசும் உருவாயின. செஞ்சி அரசில் தொண்டை மண்டலம் அடங்கியிருந்தது. மதுரை அரசில் மதுரை, ராமநாதபுரம், திருநெல்வேலி, திருச்சி, கோயம்புத்தூர், சேலம், திருவாங்கூரின் ஒரு பகுதி ஆகியவை அடங்கியிருந்தன.

கிருஷ்ணதேவராயர் மறைந்த பின் அவரது சகோதரர் அச்சுதராயர், தன்னிடம் பணியாற்றிய செவப்ப நாயக்கருக்கு தன் மனைவியின் சகோதரியை திருமணம் செய்து கொடுத்து தஞ்சையை சீதனமாக வழங்கினார். 1532ல் தஞ்சை நாயக்கர் வம்சம் தோன்றியது. இவர் தம் காலத்தில் தமிழ், தெலுங்கு, கன்னடம், சமஸ்கிருதம் ஆகிய மொழிகளில் பல இலக்கியங்கள் உருவாயின. வெளிநாட்டவருடன் நாயக்கர்கள் வாணிபத் தொடர்பு கொண்டிருந்தனர். நாயக்கர் ஆட்சிக் காலத்தில் தான் மதுரையில் கிருத்துவ சமயப் பரப்பு சபை அமைக்கப்பட்டது. இராபர்ட்-டி-நொபலி, விவேகா, மார்டின்சு, டிகாஸ்டா போன்றோர் கிருத்துவ சமயத்தை பரப்பினர். இவர்களுக்கு பெரும் எதிர்ப்பு இருந்த போதிலும் திருமலை நாயக்கர் போன்ற மன்னர்கள் ஆதரவு நல்கினர்.

விஜயநகரப் பேரரசு வீழ்ச்சியடைந்து கொண்டிருக்கும் போது 1616-17ல் மதுரை மற்றும் செஞ்சி நாயக்கர்கள் தங்களின் சுதந்திரத்தை நிலைநாட்ட முயன்றனர். நாயக்க மன்னர்களில் மதுரையின் திருமலை நாயக்கரும், செஞ்சியின் இரண்டாம் கிருஷ்ணப்பரும், தஞ்சையின் ரகுநாதரும் குறிப்பிடத்தக்கவர்கள். நாயக்க மன்னர்களுள் ஏற்பட்ட பூசல்களால் 1617க்குப் பின் செஞ்சி நாயக்க வம்சமும், 1673ல் தஞ்சை நாயக்க வம்சமும், 1736ல் மதுரை நாயக்க வம்சமும் அழிவுற்றன. தஞ்சையிலும், செஞ்சியிலும் மராத்தியர் ஆட்சியும், மதுரையில் ஆற்காடு நவாப் ஆட்சியும் ஏற்பட்டன.

ஐரோப்பியர்:

செஞ்சி நாயக்கர் வம்சத்தில் உதித்த சென்னப்ப நாயக்கரிடமிருந்து 1639ல் சென்னையை விலைக்கு வாங்கி அங்கு தங்கள் குடியேற்றங்களை ஏற்படுத்தினர். 1640ல் புனித ஜார்ஜ் கோட்டை கட்டப்பட்டது. பிரெஞ்சுக்காரர்கள் பாண்டிச்சேரியிலும், காரைக்காலிலும் ஆதிக்கம் செலுத்தினர். நாயக்க மன்னர்கள், மராத்தியர், சேதுபதிகள், ஆற்காடு நவாபுகள் ஆகியோருக்கு நடந்து கொண்டிருந்த உட்பூசல்களை ஐரோப்பியர்கள் தங்கள் வளர்ச்சிக்குப் பயன்படுத்தினர். தஞ்சையில் மராத்தியர்களான பிரதாப்சிங்கிற்கும், சாயாஜிக்கும் இடையே ஏற்பட்ட உட்பூசல், ஆங்கிலேயர்கள் நம்நாட்டு உள் விவகாரங்களில் தலையிடக் காரணமாய் அமைந்தது.

திப்புசுல்தான்:

ஆதிக்கப் போட்டிகளில் ஆங்கிலேயரும் பிரெஞ்சுக்காரரும் எதிர் எதிர் அணி அமைத்தனர். ஆற்காடு நவாப் பதவிக்கு ஆங்கிலேயர் வாலாஜா வம்சத்தவருக்கும், பிரெஞ்சுக்காரர்கள் நவயத் வம்சத்தவரான சந்தாசகிப்புக்கும் ஆதரவளித்தனர். இதன் விளைவாக 1740-60களில் மூன்று கர்நாடகப் போர்கள் ஏற்பட்டன. இதில் ஹைதராபாத் நிசாம் பதவிக்கான போட்டியும் ஏற்பட்டது. முடிவில் ஆங்கிலேயரும், வாலாஜா வம்சத்து முகமது அலியும் வெற்றி பெற்றனர். இவர்களுக்கு உதவிய மைசூரின் படைத்தளபதி நஞ்சராஜா ஏமாற்றப்பட்டார். இதனால் மைசூருக்கும், ஆங்கிலேயருக்கும் பகை வளர்ந்தது. நஞ்சராஜாவால் ஹைதர்அலியின் வளர்ச்சியை தடுக்க இயலவில்லை. தொடர்ந்து ஹைதர்அலியும் அவரது மகன் திப்புசுல்தானும் ஆங்கிலேயருடன் நான்கு போர்களில் ஈடுபட்டனர். அவையே மைசூர் போர்கள் எனப்படுகின்றன. 1782ல் ஹைதர்அலி இறந்தார். 1799ல் திப்புசுல்தான் நான்காம் மைசூர்ப் போரில் கொல்லப்பட்டார். அவரது வாரிசுகள் வேலூர் சிறையில் அடைக்கப்பட்டனர்.

இதே காலத்தில் நவாப் முகமது அலியின் பெயரால் ஆங்கில அதிகாரிகள் பாளையக்காரர்களிடமிருந்து வரிவசூல் செய்தனர். தொடர்ந்து வரிப்பணத்தைக் கட்டி வந்த பாஞ்சாலங்குறிச்சிப் பாளைக்காரர் வீரபாண்டிய கட்டபொம்மன், தான் அவமானப் படுத்தப்பட்டபோது ஆங்கிலேயரை எதிர்த்தார். ஆனால் அவரது புரட்சி ஒடுக்கப்பட்டு 1799ல் கயத்தாறு எனுமிடத்தில் தூக்கிலிடப்பட்டார். இதனைத்தொடர்ந்து ஆங்கிலேயரை எதிர்க்க ஒரு கூட்டமைப்பு ஏற்பட்டது. இதில் கட்டபொம்மனின் சகோதரர் ஊமைத்துரையும், சிவகங்கை அரசர்கள் மருது சகோதரர்களும், திண்டுக்கல் கோபால் நாயக்கரும், மூண்டா ஜிவா போன்றோரும் கலந்து கொண்டனர். 1800-01ல் புரட்சி ஏற்பட்டது. முடிவில் இவர்கள் கைது செய்யப்பட்டு தனித்தனியே தூக்கிலிடப்பட்டனர். இது முதல் ஆங்கிலேயர்கள் தமிழகம் முழுவதும் நேரடியாக ஆதிக்கம் செலுத்தினர். 1806ல் வேலூர்க் கோட்டைச் சிறையில் அடைபட்டிருந்த திப்புவின் பிள்ளைகளுக்கு ஆதரவாக ஒரு கலகம் நடைபெற்றது. அதையும் ஆங்கிலேயர் ஒடுக்கினர்.

ஆங்கில ஆட்சிக் காலத்தில் இரயித்வாரி முறை மூலம் நிலவரி சீர்திருத்தம் கொண்டு வரப்பட்டது. நீதித்துறை சீரமைக்கப்பட்டது. 1861ல் சென்னை உயர்நீதி மன்றம் அமைக்கப்பட்டது. மேற்கத்திய கல்விமுறை புகுத்தப்பட்டது . 1857ல் சென்னை பல்கலைக்கழகம் துவங்கப்பட்டது. இக்காலக் கட்டத்தில் ஐரோப்பிய மொழி வல்லுநர்களின் முயற்சி காரணமாக தமிழ் இலக்கிய மறுமலர்ச்சி ஏற்பட்டது. தமிழ்மொழியில் நிறுத்தக் குறியீடுகள் இக்காலத்தில் தான் பயன்படுத்தப்படத் துவங்கின.


தொடரும்....

Wednesday, November 02, 2011

தமிழக வரலாறு: பாகம்-2

சோழர்கள்:

9-ஆம் நூற்றாண்டின் இறுதிக் காலத்தில் சோழப் பேரரசு உதயமானது. இச்சோழப் பேரரசுகளில் சிறந்தவர் முதலாம் ராஜராஜன். அவர் காலத்தில் ஏறத்தாழ தென்னகம் முழுவதும் சோழர்களின் ஆட்சிக்குட்பட்டிருந்தது. இலங்கையை வென்று வடஇலங்கையில் சோழர் ஆட்சியை ஏற்படுத்திய பெருமை முதலாம் ராஜராஜனையேச் சாரும். இது "மும்முடிச் சோழ மண்டலம்" என அழைக்கப்பட்டது. இவரால் அமைக்கப்பட்ட தஞ்சை பெரியகோவில் இவரது வெற்றிக்கும், கலை ஆர்வத்துக்கும் எடுத்துக்காட்டாய் அமைந்துள்ளது. இவருக்குப் பின் 13ம் நூற்றாண்டின் துவக்கம் வரை சோழப் பேரரசைக் கட்டிகாத்தவர்கள் முதலாம் ராஜேந்திரனும், முதலாம் குலோத்துங்கனும், மூன்றாம் குலோத்துங்கனும் ஆவர். முதலாம் ராஜேந்திரன் வடஇந்தியாவின் மீது படையெடுத்து கங்கை வரை சென்று "கங்கைகொண்டான்" எனப் போற்றப்பட்டான். அதன் நினைவாக கங்கைகொண்ட சோழபுரம் எனும் புதிய நகரை நிர்மானித்தான். முதலாம் குலோத்துங்கன் காலத்தில் 13 பேர் கொண்ட குழு ஒன்று சீனா, இந்தோனேசியா போன்ற நாடுகளுக்குச் சென்றது. சோழர் காலத்தில் உள்ளாட்சி முறை மிகச் சிறப்பாகச் செயல்பட்டது. குடவோலை முறையில் உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

பாண்டியர்கள்:

13 ம் நூற்றாண்டின் துவக்கம் சோழப் பேரரசின் வீழ்ச்சிக்கும், பாண்டியர் தம் எழுச்சிக்கும் வித்திட்டது. முதலாம் மாறவர்மன் சுந்தர பாண்டியன் பாண்டிய நாட்டைச் சோழ நாட்டின் பிடியிலிருந்து மீட்டார். முதலாம் சடையவர்மன் சுந்தரபாண்டியன் தென்னகம் முழுவதையும், இலங்கையையும் வென்று "எம் மண்டலமும் கொண்டருளியவன்" என்ற சிறப்புப் பெற்றார். இவ்வாறு தமிழ்மன்னர்கள் ஒருவருக்கொருவர், ஒரு வம்சம் மற்றொரு வம்சத்திற்கு எதிராகப் போர் செய்து தங்களது செல்வாக்கை நிலைநாட்டினர். இது நீண்ட காலம் நீடிக்கவில்லை.

மாலிக்காப்பூர்:

தில்லி சுல்தானாகஇருந்த அலாவுதீன் கில்ஜி 1310ல் தென்னிந்திய இந்து அரசுகளை ஒடுக்கவும், கொள்ளையடிக்கவும் தன் படைத் தலைவனான மாலிக்காபூரை அனுப்பினார். அப்போது தென் இந்தியாவில் தேவகிரியில் யாதவர் அரசு, துவார சமுத்திரத்தில் ஹொய்சாள அரசு, வாரங்கல்லில் காகத்திய அரசு, மதுரையில் பாண்டிய அரசு ஆகியன இருந்தன. மாலிக்காபூர் முதலில் தேவகிரியையும் பின்பு வாரங்கல் மற்றும் துவார சமுத்திரத்தையும் தோற்கடித்து ஏராளமான பொருட்களை கவர்ந்து சென்றார். அக்காலத்தில் மதுரையை ஆண்டு வந்தவர்கள் மாறவர்மன் குலசேகர பாண்டியனும், அவரது மகன்களான வீரபாண்டியனும் சுந்தரபாண்டியனும் ஆவர். இவர்கள் பெரும் பரப்பினைக் கொண்ட பேரரசினை வெவ்வேறு தலைநகரங்களிலிருந்து ஆட்சி செய்தனர். மாறவர்மன் குலசேகரின் மற்றொரு மனைவியின் மகன் ராஜராஜன் சுந்தரன் என்பவர் மாலிக்காபூருடன் சேர்ந்து கொண்டார்.

இந்நிலையில் மாலிக்காபூர் ஏராளமான சேதத்தை விளைவித்து, கோயில்களை இடித்து, பலரைக் கொன்று, ஏராளமான செல்வங்களை கவர்ந்து சென்றார். இதனால் நாட்டில் வறுமை பல்கிப் பெருகியது. இச்சூழலில் தான் கேரள மன்னன் ரவிவர்மன் குலசேகரன், பாண்டிய நாட்டின் மீது தன் மேலாதிக்கத்தினைச் சிலகாலம் நிலை நாட்டினார். ஹொய்சாள அமைச்சர்களின் உதவியோடு பாண்டியர்கள் மீண்டும் நாட்டை மீட்டனர். மீண்டும் 1314ல் அலாவுதீன் கில்ஜியின் மகனான முபாரக் ஷாவின் படைத்தலைவரான குசுரு கானின் தலைமையில் ஒரு படை மதுரையைக் கொள்ளையடித்துச் சென்றது. தில்லிசுல்தான் முகமது பின் துக்ளக் ஆட்சியில் மாபார் என அழைக்கப்பட்ட தமிழ்நாட்டை தில்லி அரசுடன் சேர்க்க முயற்சி செய்யப்பட்டது.

1327ல் மதுரையின் ஆளுநராக ஜலாலுதீன் ஹசன்ஷா என்பவர் நியமிக்கப்பட்டார். மாபார் எனப்பட்ட தமிழகம் தில்லிசுல்தானியத்தின் 23 மாநிலங்களில் ஒன்றாக்கப்பட்டது. 1335ல் ஹசன்சா தில்லியிலிருந்து பிரிந்து சுதந்திரமாக இயங்கத் துவங்கினார். மதுரை சுல்தானியத்தை உருவாக்கினார். இவரைத் தொடர்ந்து ஏழு சுல்தான்கள் சுமார் 40 ஆண்டுகள் ஆட்சிசெய்தனர். இவர்களில் கியாசுதீன் தங்கணிசா என்பவர் மிகக் கொடுமையான ஆட்சி செய்தார் எனக் கூறப்படுகிறது.


விஜயநகரம்:

இந்து சமயத்தையும் இந்து பண்பாட்டையும் காக்க வேண்டும் என ஹரிஹரர், புக்கர் எனும் சகோதரர்கள் இந்து அரசு ஒன்றினை விஜயநகரில் கி.பி. 1336ல் உருவாக்கினர். புக்கர் மதுரை சுல்தான்களின் கொடுமையை ஒழித்துக் கட்ட ஹஸன்கங்கு என்ற சுல்தானுடன் போர் புரிந்தார். 1371ல் புக்கரின் மூத்த மகன் குமார கம்பணர் மதுரை சுல்தான்களின் ஆட்சிக்கு முடிவு கட்டியதோடு விஜய நகர ஆதிக்கத்தையும் நிலைநாட்டினார். மூடப்பட்ட கோவில்கள் திறக்கப்பட்டு வழிபாட்டு நெறிகள் நடைமுறைபடுத்தப்பட்டன. அரங்கநாதனின் திருவுருவச்சிலை மீண்டும் திருவரங்கத்திலே வைக்கப்பட்டது. குமார கம்பணர் விஜயநகர ஆட்சிக்குட்பட்ட தமிழகப் பகுதியின் ஆளுநராக இருந்தார். கி.பி.1371 முதல் கி.பி.1525 வரை விஜயநகர அரசுகள் தமிழகம் முழுவதையும் தங்களது ஆட்சியின் கீழ்கொண்டு வந்தனர். 1525ல் விஜயநகரப் பேரரசை ஆண்ட கிருஷ்ணதேவராயர் தம் ஆட்சிக்கு உட்பட்ட தமிழகத்தை பிரித்துத் தம் ஆளுநர்களிடம் ஒப்படைத்தார்.


தொடரும்....

Tuesday, November 01, 2011

தமிழக வரலாறு: பாகம்-1

பழந்தமிழர்களின் காலம் சுமார் கி.மு. ஆயிரத்திலிருந்து தொடங்குவதாக ஆராய்ச்சியாளர்கள் கருதுகின்றனர். பழந்தமிழ் நாட்டின் எல்லைகளாக கிழக்கில் வங்காள விரிகுடாவும், மேற்கில் அரபிக்கடலும், தெற்கில் இந்துமாக்கடலும், வடக்கே விந்தயமலையும் இருந்தன. இப்பகுதியே தென்னாடு அல்லது திராவிட நாடு என முற்காலத்தில் வழங்கப்பட்டு வந்தது.


இந்தியாவில் திராவிட பண்பாட்டின் தாயகமாய் தமிழகம் இருந்து வருகிறது. ஆரியர்கள் இந்தியாவிற்கு வருவதற்கு முன்பிருந்தே இந்தியாவில் சிந்துவெளியிலும், ஏனைய பல பகுதிகளிலும் திராவிடர் வாழ்ந்து வந்தனர். வடஇந்தியாவில் ஆரியர் குடியேறிய பின் தெற்கு நோக்கி தள்ளப்பட்ட திராவிடர்கள், விந்திய மலைக்கு தெற்கே குடியேறினர். பண்டைத் தமிழகத்தின் பகுதிகளாக இன்றைய ஆந்திரம், கர்நாடகம், கேரளா, தமிழ்நாடு ஆகியவை இருந்தன.


சங்ககாலம்:

வரலாற்றுக்காலம் என்பது சங்ககாலத்திலிருந்தே துவங்குகிறது. சங்கத்தின் காலம் பற்றி வெவ்வேறு கருத்துகள் இருப்பினும் கி.மு.3ம் நூற்றாண்டிலிருந்து கி.பி.3ம் வரையே சங்ககாலம் என்பது அறிஞர் பலரின் கருத்து. சங்ககாலம் இலக்கிய வளர்ச்சிக்கும் சமயப்பொறைக்கும் இருப்பிடமாக அமைந்திருந்தது. இக்காலத்தில் வஞ்சியைத் தலைநகரமாகக் கொண்டு சேரரும், உறையூரைத் தலைநகராகக் கொண்டு சோழரும், மதுரையைத் தலைநகராகக் கொண்டு பாண்டியரும் ஆட்சி நடத்தினர்.


சங்ககால மக்கள் சாதிப்பாகுபாடு இன்றியும், சமயப்பூசல்கள் இன்றியும், வீரத்துடன் போர்நெறி பிறழாமலும், செங்கோண்மையோடும் வாழ்ந்தனர். இவர்களில் பெரும்பான்மையோர் விவசாயத்திலும், வாணிபத்திலும் ஈடுபட்டனர். சங்ககாலத் தமிழர் தாம் வாழ்ந்த நிலங்களை குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை எனப் பிரித்திருந்தனர். இக்காலத் தமிழர்கள் வெளிநாட்டவர்களுடன் வாணிபத்தொடர்பு கொண்டிருந்தனர். கிரீஸ், ரோம் நாடுகளுடன் கொண்டிருந்த தொடர்பு பற்றி சங்க இலக்கியங்களும், பெரிப்ளூஸ், பிளினி, தாலமி போன்ற வெளிநாட்டவர் குறிப்புகளும், தமிழகத்தில் கண்டெடுக்கப்பட்ட வெளிநாட்டவர் நாணயங்களும் தெரிவிக்கின்றன. ரோமப் பேரரசர் அகஸ்டஸின் அரசவைக்குப் பாண்டிய நாட்டு தூதுவர் இருவர் கி.மு. முதலாம் நூற்றாண்டில் சென்றிருந்ததை ஸ்டிராபோ என்ற வெளிநாட்டவர் குறிப்பு தெரிவிக்கிறது.


சங்ககால மன்னர்கள் ஒருவருக்கொருவர் போரிட்டு கொண்டு இருந்ததால் அந்நியரின் வருகை எளிதானது. கி.பி. 3ம் நூற்றாண்டில் களப்பிரர் எனும் இனத்தவர் தமிழ் மன்னர்களை வென்று, தமது ஆட்சியை நிறுவினர். கி.பி. 6ம் நூற்றாண்டு வரை சுமார் 3 நூற்றாண்டுகள் காலம் ஆட்சி செய்த இவர்கள், தங்கள் காலத்தில் என்ன செய்தார்கள் என்ற தடயம் எதனையும் விட்டுசெல்லாத காரணத்தால் அவர்கள் காலம் தமிழக வரலாற்றில் இருண்ட காலம் எனப்படுகிறது. இக்களப்பிரர்கள் சமணம் அல்லது பெளத்த சமயத்தை சேர்ந்தவர்களாக இருந்திருக்கலாம் எனக் கருதப்படுகின்றனர்.


பல்லவர்:

கி.பி. 4ம் நூற்றாண்டு முதல் தமிழகத்தின் வடபகுதியில் பல்லவர்கள் ஆட்சி செய்தனர். இவர்கள் முற்காலப்பல்லவர் எனப்படுவர். கி.பி. 7ம் நூற்றாண்டின் துவக்கத்திலிருந்து ஆட்சி செய்த மன்னர்கள் பிற்கால பல்லவர் எனப்படுவர். இவர்கள் காலத்தில் முதலாம் மகேந்திர வர்மன் முதன்முதலில் தமிழகத்தில் குடைவரை கோவில் அமைத்தார். இவரது குடைவரைக்கோவில்கள் மாமண்டூர், மண்டகப்பட்டு, சீயமங்கலம், நாமக்கல், பல்லாவரம், திருக்கழுக்குன்றம், திருச்சி, ஆகிய இடங்களில் காணப்படுகின்றன. அவரது மகனான முதலாம் நரசிம்மவர்மன் கி.பி. 631ல் இலங்கையை வென்றார்.


பல்லவர் காலத்தில்தான் தமிழ்நாட்டில் பக்தி இயக்கம் துவங்கியது. சைவ நாயன்மார்களும், வைணவ ஆழ்வார்களும் தோன்றினர். இவர்கள் சமண, பெளத்த மதத்தை சார்ந்தவர்களை மனம்மாற்ற முயன்றனர். மகேந்திர வர்மன் மூலம் அப்பரும், தெற்கே கூன்பாண்டியன் மூலம் திருஞானசம்பந்தரும் சமணரை வீழ்த்தினர். பல்லவர்கள் காலம் தென்னிந்தியக் கட்டடக் கலை வளர்ச்சிக்கு முன்னோடியாக இருந்தது.


தொடரும்....