Thursday, August 09, 2012

புதிய ஆத்திசூடி

1) அச்சம் தவிர்

2) ஆண்மை தவறேல்

3) இளைத்தல் மகிழ்ச்சி

4) ஈகை திறன்

5) உடலினை உறுதி செய்

6) ஊண் மிக விரும்பு

7) ஏறுபோல் நட

8) ஒற்றுமை வலிமையாம்

9) ஓய்தல் ஒழி

10) காலம் அழியேல்

11) கீழோர்க்கு அஞ்சேல்

12) குன்றென நிமிர்ந்து நில்

13) கூடித்தொழில் செய்

14) கெடுப்பது சோர்வு

15) கேட்டினும் துணிந்து நில்

16) கொடுமையை எதிர்த்து நில்

17) சரித்திரத் தேர்ச்சி கொள்

18) சாவதற்கு அஞ்சேல்

19) சிதையா நெஞ்சு கொள்

20) சீறுவோர்ச் சீறு

21) சூரரைப் போற்று

22) செய்வது துணிந்து செய்

23) சோதிடம் தனை இகழ்

24) தாழ்ந்து நடவேல்

25) தீயோர்க்கு அஞ்சேல்

26) துன்பம் மறந்திடு

27) தூற்றுதல் ஒழி

28) தெய்வம் நீ என்று உணர்

29) தேசத்தைக் காத்தல் செய்

30) தையலை உயர்வு செய்

31) நினைப்பது முடியும்

32) நுனி அளவு செல்

33) நையப் புடை

34) பணத்தினைப் போற்றல்

35) புதியன விரும்பு

36) பூமி இழிந்திடேல்

37) பேய்களுக்கு அஞ்சேல்

38) பொய்மை இகழ்

39) போர்த்தொழில் பழகு

40) மானம் போற்று

41) மிடிமையிலே அழிந்திடேல்

42) முனையிலே முகத்து நில்

43) யாரையும் மதித்து வாழ்

44) ராஜஸம் பயில்

46) ரெளத்திரம் பழகு

47) வருவதை மகிழ்ந்து உண்

48) வான நூல் பயிற்சி கொள்

49) வீரியம் பெருக்கு

50) வெடிப்புறப் பேசு

51) வேதம் புதுமை செய்

52) வையத்தலைமை கொள்


-மகாகவி பாரதியார்

அச்சம் இல்லை (பண்டாரப் பாட்டு)

அச்சம் இல்லை அச்சம் இல்லை அச்சம் என்பது இல்லையே!
இச்சகத்து உ(ள்) ளோர் எலாம்
எதிர்த்து நின்ற போதிலும்
அச்சம் இல்லை அச்சம் இல்லை அச்சம் என்பது இல்லையே!
துச்சமாக எண்ணி நம்மைத்
தூறு செய்த போதிலும்
அச்சம் இல்லை அச்சம் இல்லை அச்சம் என்பது இல்லையே!
பிச்சை வாங்கி உண்ணும் வாழ்க்கை
பெற்றுவிட்ட போதினும்
அச்சம் இல்லை அச்சம் இல்லை அச்சம் என்பது இல்லையே!


கச்சு அணிந்த கொங்கை மாதர்
கண்கள் வீசு போதிலும்
அச்சம் இல்லை அச்சம் இல்லை அச்சம் என்பது இல்லையே!
நச்சை வாயிலே கொணர்ந்து
நண்பர் ஊட்டும் போதினும்
அச்சம் இல்லை அச்சம் இல்லை அச்சம் என்பது இல்லையே!
பச்சை ஊன் இயைந்த வேல்
படைகள் வந்த போதினும்
அச்சம் இல்லை அச்சம் இல்லை அச்சம் என்பது இல்லையே!
உச்சிமீது வான்இடிந்து
வீழுகின்ற போதினும்
அச்சம் இல்லை அச்சம் இல்லை அச்சம் என்பது இல்லையே!

-மகாகவி பாரதியார்

நல்லதோர் வீணை

நல்லது ஓர் வீணை செய்தே- அதை
நலம் கெடப் புழுதியில் எறிவது உண்டோ?
சொல்லடி சிவசக்தி- எனைச்
சுடர்மிகும் அறிவுடன் படைத்துவிட்டாய்.
வல்லமை தாராயோ-இந்த
மாநிலம் பயனுற வாழ்வதற்கே
சொல்லடி, சிவசக்தி -நிலச்
சுமை என வாழ்ந்திடப் புரிகுவையோ?


விசையுறு பந்தினைப்போல்- உள்ளம்
வேண்டிய படி செலும் உடல் கேட்டேன்
நசைஅறு மனம் கேட்டேன்- நித்தம்
நவம் எனச் சுடர்தரும் உயிர் கேட்டேன்.
தசையினைத் தீ, சுடினும் -சிவ
சக்தியைப் பாடும் நல் அகம் கேட்டேன்.
அசைவு அறு மதிகேட்டேன்- இவை
அருள்வதில் உனக்கெதும் தடை உளதோ?

- மகாகவி பாரதியார்

Thursday, August 02, 2012

பொன் மொழிகள்

தோற்றவனை தேற்றி, அடுத்த இலக்குக்கு தாயார் படுத்தவும்,
வெற்றி பெற்றவனை அந்த போதையிலேயே மூழ்க விடாமல் தடக்கவும், ஐந்து அல்லது ஆறு வார்த்தைகளை கொண்ட வாக்கியத்தால் முடியும் என்றால் அது பொன்மொழியாகிறது.
பொன்மொழிகள் வெற்றியாளர்களின் பரணியல்ல அவை அனுபவசாலிகளின் ஆற்றுப்படை.
"பொன்மொழி" எனும் பெயரே அவ்வாக்கியங்களின் மதிப்பை விளக்கும். இணையத்திலும் , புத்தகங்களிலும் நான் படித்து என் மனதை தூண்டிய பொன்மொழிகளை இங்கே பகிர்ந்து கொண்டுள்ளேன்.
மேலும் என் மனம் தொடும் பொன் மொழிகளை இப்பதிவில் தரவேற்றம் செய்து கொண்டே இருப்பேன்.


1) "நான் கடற்கரையில் விளையாடும் ஒரு சிறுவன். அங்கே ஒரு கூழாங்கல்லையும், இங்கே ஒரு சங்கையும், கண்டுபிடித்து பெருமைபட்டு நிற்கும் பொழுது, எதிரே உண்மையென்னும் மாசமுத்திரம் கண்டுபிடிக்கப்படாமல் உள்ளது."
-சர்.ஐசக்.நியூட்டன்


2) முன்னோக்கி செல்லும் போது கனிவாய் இரு, ஒரு வேளை பின்னோக்கி வர நேரிட்டால் உதவுவதற்கு ஆட்கள் இருப்பார்கள்.


3) எங்கே விழுந்தாயென பார்க்காதே, எங்கே வழுக்கினாய் என்று பார்.


4) தெரியாததை பற்றி பேசுவதில்லை என ஒவ்வொரு மனிதனும் முடிவு செய்துவிட்டால், உலகில் முழு நிசப்தம் நிலவும்.


5) நான் மாறும் போது தானும் மாறியும், நான் தலையசைக்கும் போது தானும் தலையசைக்கும், நண்பன் தேவையே இல்லை. அதற்கு என் நிழலே போதும்.


6) வாழ்க்கை ஒரு விசித்தரமான கல்லூரி. இங்கே தேர்வுகள் முடிந்த பிறகே பாடங்கள் கற்பிக்கப்படுகின்றன.


7) உண்மை புறப்பட ஆரம்பிக்கும் முன், பொய் பாதி உலகை கடந்து விடுகிறது.


8) சோம்பேறித்தனம் பல சமயங்களில் பொறுமை என்ற தவறான பெயரால் கணிக்கப்படுகிறது.


9) இலக்கை நோக்கி பற!
பறக்க முடியாவிட்டால் ஓடு!!
ஓட முடியாவிட்டால் நட!!!
நடக்கவும் முடியாவிட்டால் ஊர்ந்து செல்!!!! ஆனால் எப்படியாவது நகர்ந்து கொண்டே இரு.


10) எல்லோரும் தம்மை விட்டு விட்டு, மற்றவர்களையே சீர்திருத்த முயலுகிறார்கள்.
-தாகூர்

Monday, May 21, 2012

ஏழை மாணவர்களுக்கு ஒரு நற்செய்தி

இணையத்தில் உலவிக்கொண்டு இருக்கும் பொழுது ஏழை மாணவர்களுக்கு
பயனளிக்கூடிய ஒரு தேர்வு குறித்து செய்தியினை கண்டேன். அதனை பகிர்ந்து
கொள்கிறேன்.

இன்றை சூழலில் குடும்பசூழ்நிலை காரணமாக பெரும்பாலான மாணவர்கள் தங்களது
பொறியியல் கனவுகளை கைவிட்டு கலை, அறிவியல் துறைகளில் இளங்களை பட்டம்
பயில்கின்றனர். ஆனால் அதன் பின் மேலே படிக்க வேண்டும் என்ற ஆசை
இருந்தும், குடும்பசூழ்நிலை காரணமாக ஏதாவது ஒரு வேலையில்
சேர்ந்துவிடுகின்றனர். அவர்கள் இளநிலை பட்டதாரியாக இருந்தாலும்
பொறியியல் பயின்றவர்களைவிட பலமடங்கு குறைவான சம்பளமே வாங்குகின்றனர்.
இவ்வாறு அவர்களது திறமை வீணாவதை தடுக்க இந்தியாவின் முன்னணி தகவல்
தொழில்நுட்ப நிறுவனம் ஒன்று முன்வந்துள்ளது.

விப்ரோ(WIPRO) நிறுவனம் இந்தியாவில் நன்கு அறியப்பட்ட தகவல் தொழில் நுட்ப
நிறுவனமாகும். இந்நிறுவனமே WASE(Wipro Academy of Software Excellence)
என்னும் தேர்வின் மூலம் அறிவியலில் இளநிலை பயின்ற மாணவர்களை
தேர்ந்தெடுத்து தனது பணியில் அமர்த்துவதுடன், இந்தியாவில் IIT (Indian
Institute of Technology)களுக்கு நிகராக கருதப்படும் BITS பல்கலைகழத்தில்
இலவசமாக MS (Master of Science) பட்டமும் பயில வைக்கின்றது. வாரத்தில்
திங்கள் முதல் வெள்ளி வரை விப்ரோ நிறுவனத்தில் பணியாற்றிக்கொண்டே சனி
மற்றும் ஞாயிறுகளில் படிப்பினை மேற்கொள்ளலாம். 4ஆண்டுகள் கால அளவு கொண்ட
இப்படிப்பை நாம் வேலை செய்து கொண்டே பயில்வதால் நமது அனுபவமும், அறிவும்
ஒருசேர வளரும் இந்த படிப்பை முடித்த பின் நமது தகுதி M.E (Master of
Engineering) பயின்றவர்களுக்கு இணையாக இருக்கும்.

தேர்வுக்கான தகுதிகள் :

1) பத்து மற்றும் பன்னிரெண்டாம் வகுப்பில் 60% மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும்.

2) பன்னிரண்டாம் வகுப்பில் கணிதத்தை ஒரு பாடமாக பயின்று இருக்க வேண்டும்.

3) B.sc (Computer Science, Maths, Physics, Elecronics), BCA, BCM
ஆகியவற்றில் ஒன்றை பயின்று இருக்க வேண்டும்.

4) இளநிலை பட்டபடிப்பில் 60% மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும்.

5) இளநிலை இறுதி ஆண்டு படிப்பவர்களும் விண்ணப்பிக்கலாம்.

தேர்வு முறைகள் :

தேர்வு மூன்று கட்டங்களை கொண்டது. அவை,

1) பொது நுழைவுத்தேர்வு (Wipro Entrance Test),

2) தொழில் நுட்ப நேர்காணல் (Technical Interview),

3) நிறுவனத்தின் மனிதவள அதிகாரியுடனான நேர்காணல் (HR Interview).

பொது நுழைவுத்தேர்வில் verbal, analtycal, maths ஆகியவற்றிலிருந்து
கேள்விகள் கேட்கப்படுகின்றன. இதில் verbal பகுதியில் ஆங்கில மொழி
இலக்கணம் சார்ந்த கேள்விகளும் analtycal பகுதிக்கான கேள்வி CAT, GMAT
போன்ற தேர்வுகளில் கேட்கப்படுவதை போலிருக்கும். எனவே CAT, GMAT
தேர்வுகளுக்கான வழிகாட்டி நூல்களை பயிலலாம். Maths பகுதியில் பதினொன்றாம்
பன்னிரெண்டாம் வகுப்பு கணிதத்தை அடிப்படையாக கொண்டு கேள்விகள்
அமைந்திருக்கும் இதில் வெற்றிபெறுபவர் தொழில்நுட்ப நேர்காணலுக்கும் அதில்
வெற்றி பெறுபவர் இறுதி நேர்காணலுக்கும் தேர்வு பெறுவர்.


தேர்வு குறித்து மேலும் தகவல்களுக்கு,
http://careers.wipro.com/it/campus/india/wase.htm

Friday, May 18, 2012

உரிமை/கடமை/கட்டாயம்

"ஓட்டளிப்பது நமது உரிமை"
"ஓட்டளிப்பது நமது கடமை"
"ஓட்டளிப்பது நமது கட்டாயம்"

தேர்தலாணைய இணையதளத்திற்கு வழி தவறி வந்துவிட்டோமோ? என நினைக்க வேண்டாம்.
இவை நமது ஜனநாயக உரிமை/கடமை/கட்டாயமான ஓட்டை பெறுவதற்காக கட்சிகளும்,
தேர்தல் ஆணையமும் தேர்தல் காலங்களில் போடும் கூச்சல்கள்.
சரி இவ்வளவு சத்தமாக கூவுகிறார்களே, மேலும் எந்தவொரு செயலும் உரிமையாக
இருந்து கடமையாக மாறி பின்பு கட்டாயமாக்கப்பட்டதாக வரலாறு இல்லையே.
ஒருவேளை ஓட்டளிப்பது பெரிய மாற்றத்தை கொண்டுவந்துவிடுமோ? என்றெண்ணி,
ஓட்டளிப்பதால் என்ன பயன் என்று வினவினால், அவர்கள் கூறும் பதில்,

"ஜனநாயகம் காக்கப்படவேண்டும்"
"மக்களாட்சி மதிக்கப்படவேண்டும்"

இந்த பதிலை கேட்டவுடன் நமது ஆர்வம் பொசுங்கி விடுகிறது. ஏனென்றால், 60
வருடங்களாக ஜனநாயகத்தை காத்துவருகிறோம், மக்களாட்சியை மதித்து வருகிறோம்.
ஆனால் அந்த ஜனநாயகத்தால் அடித்தட்டு ஜனங்களை காக்க முடியவில்லை.
மக்களாட்சியால் மக்கள் வாழ்வில் மலர்ச்சியை கொண்டுவரமுடியவில்லை.

அப்படியானால், ஓட்டளித்தால் அனைத்தும் மாறிவிடும் என்று கூறுவது ஆளும்
வர்க்கத்தினால் ஏற்படுத்தப்படும் மாயை என்று எண்ணினால், உடனே 60 ஆண்டுகால
ஜனநாயகத்தால் பொருளாதாரம் உயரவில்லையா ? வறுமைக்கோட்டிற்கு மேலே மக்கள்
தூக்கிவிடப்படவில்லையா? என்று கேட்கிறார்கள். பொருளாதாரம்
உயர்ந்துவிட்டது ஆனால் அடித்தட்டு மக்களின் வாழ்க்கைத்தரம்
தாழ்ந்துவிட்டது. வறுமைக்கோட்டிற்கு மேலே மக்கள் ஏற்றப்பட்டுள்ளார்களா?
அல்லது மக்களுக்கு கீழே வறுமைக்கோடு தள்ளப்பட்டுள்ளதா?

சரி, ஓட்டால் பயன்பெறும் அரசியல்வாதிகள்தான் சுய இலாபத்தையே குறிக்கோளாய்
கொண்டு உள்ளனர். ஓட்டளிக்கும் நாம் சரியாக உள்ளோமா? என பார்த்தால் அது
மிக மோசமாக உள்ளது.
"நேற்று தந்தை விலையில்லா தொலைக்காட்சி வாங்கிய பொழுது முட்டாள்தனம் என்றேன்,
இன்று தாய் விலையில்லா மின்விசிறி வாங்கும் பொழுது ஏமாளித்தனம் என்றேன்,
ஆனால் நாளை எனக்கு வழங்கப்பட இருக்கும் விலையில்லா மடிக்கணினியை எண்ணி
மயக்கத்தில் இருக்கிறேன்."
இது தான் தற்பொழுதைய சமுதாய நிலைமை.

யாருக்கும் வாக்களிக்க விருப்பமில்லை என 49-O படிவத்தை பயன்படுத்தலாம் என
எண்ணினால், அந்த படிவத்தையும் எனக்கு மடிக்கணினி கொடுத்த ஆளும்
கட்சிகாரர்களும், 1000 ரூபாய் கொடுத்த எதிர்கட்சிகார்களும் கூடி உள்ள
இடத்திலே நின்று நிரப்ப வேண்டியுள்ளது. அந்த 49-O விருப்பத்தையாவது
ஓட்டளிக்கும் இயந்திரத்தில் வைக்க வேண்டுமென்று கேட்டால், மீண்டும் அதே
குரல்,

"ஜனநாயகம் காக்கப்பட வேண்டும்"
"மக்களாட்சி மதிக்கப்படவேண்டும்"

என்னால் என்ன சொல்லமுடியும் கீழ்கண்ட ஒன்றைத்தவிர,

"அவனவன் ஆயிரம் பிரச்சனைய வச்சுகிட்டு சந்தோஷமா இருக்கான். இந்த ஒரு ஓட்ட
வச்சுகிட்டு நான் படுற அவஸ்த இருக்கே ஐயய்யய்யோ...."

Thursday, May 17, 2012

இன்றைய கோடாங்கி

வல்லரசு பாரதம் இது! வல்லரசு பாரதம் இது!!
நாளொன்றுக்கு 32 ரூபாய் சம்பாதிக்கும் செல்வான்கள் வாழும் வல்லரசு பாரதம் இது!
GDPதான் ஏறுது! GDPதான் ஏறுது!! வாழ்க்கைத்தரம் தான் குறையுது! மக்களின்
வாழ்க்கைத்தரம் தான் குறையுது!!
IPL போட்டிகள் இரவிலேதான் நடக்குது ஒளி வெள்ளத்தில் மிதக்குது,
பாழா போன பிள்ளைகள் தான் முழிக்குது! இருட்டுல படிக்க முடியாம பள்ளிப்
பிள்ளைகள் தான் முழிக்குது!!
வல்லரசு பாரதம் இது! வல்லரசு பாரதம் இது!!
சாரயத்தத்தான் அரசு கொடுக்குது கல்விக்குத்தான் கைய விரிக்குது! இலவச
கல்விக்குத்தான் கைய விரிக்குது!!
திட்டத்துக்கு பணம் இல்ல அரசோட திட்டத்துக்கே பணம் இல்ல
ஆனாலும் கோடிக்கணக்கில பைக்குத்தான் போகுது! அரசியல்வாதிகள் பைக்குத்தான் போகுது!!
ஆறெல்லாம் ஓடுது ஆறெல்லாம் ஓடுது
தண்ணிதான் இல்லீங்க மணல் லாரிகளா ஓடுது! மணல் லாரிகளா ஓடுது!
இந்த பிரச்சனைக்கெல்லாம் முடிவை ஜக்கம்மா சொல்றா! ஜக்கம்மா சொல்றா!!
சிந்திக்க சொல்றா மக்களை சிந்திக்க சொல்றா
சிந்திக்க ஆரம்பிச்சா விடிவு வந்து பொறக்குமுனு
ஜக்கம்மா சொல்றா! ஜக்கம்மா சொல்றா!!

Tuesday, January 03, 2012

தமிழ் - செம்மொழி

பழம்பெரும் இலக்கண நூலான தொல்காப்பியத்தில் "செந்தமிழ் செம்மொழியாகிய தமிழ்" என்னும் சொல் இடம் பெற்றுள்ளது. சங்க நூலாகிய அகநானூறு செம்மொழி என்னும் சொல்லை நடுவுநிலை தவறாத மொழி எனும் பொருளில் ஆண்டுள்ளது.

ஆய்வியல் அறிஞராகிய கால்டுவெல் தாம் எழுதிய 'திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம்' என்ற நூலில் "திராவிட மொழிகள் அனைத்திலும் உயர்தனிச் செம்மொழியாய் நிலைபெற்று விளங்கும் தமிழ்" என்று தமிழ் மொழி செம்மொழியே என்று தெளிவுபடுத்தியுள்ளார்.


தமிழ்மொழி செம்மொழித் தகுதிபாட்டுத் சான்று ஆதாரங்கள் :

1) தொல் இலமூரியா காலத்தோடு தொடர்புடையது.

2) சந்த ஒலிச்சால்பு.

3) உலகளாவிய உணர்வுப் பெருமிதம்.

4) ஆரிய மொழிகளுக்கிடையே தலைநிமிரும் தமிழின் தரம்.

5) சொல்லமைப்பின் தொன்மையும் ஒலிச்சுருக்கமும்.

6) தமிழ்மொழியில் உள்ள 'அம்மா', 'அப்பா' என்கிற சொற்கள் பிற பழைமையான மொழிகளில் ஒத்த வடிவங்களில் உள்ளமை.

7) எழுவாய் வேற்றுமைக்குத் தனி விகுதியின்மை.

8) அடைமொழிகளி பிரிக்கத் தக்கவை -ஆழமுடைமை.

9) தமிழ்ச் சொற்களுக்குப் பாலினம் இல்லை.

10) தமிழில் ஒழுங்குமுறையற்ற சொற்கள் இல்லை.

11) தமிழ்மொழி தோன்றிய காலத்தைக் கண்டறிய இயலும்.

12) தமிழில் காணப்படும் சொற்கள் இயற்கையான காரணகாரிய தொடர்புடையவை.

13) ஒருமை, இருமை, பன்மை என்று வட மொழியில் இருக்க, தமிழில் ஒருமை, பன்மை என்று இரண்டைப் பொருத்தமாகக் கொண்டு இருத்தல்.

14) தமிழின் தனித்தன்மையும் - இயற்கைத் தன்மையும்.

15) உயர்ந்த இலக்கியத் தரமிகுந்த நூற்கோவைகள்.

இத்தகு சிறப்புடைய தமிழ் இன்றும் வாழும் மொழியாகவே உள்ளது.