நாயக்கர்கள்:
விஜயநகர ஆளுநர்கள் நாயக்க வம்சங்களை உருவாக்கினார். 1526ல் வையப்ப நாயக்கர் தலைமையில் செஞ்சி நாயக்கர் அரசும், 1529ல் விசுவநாத நாயக்கர் தலைமையில் மதுரை நாயக்கர் அரசும் உருவாயின. செஞ்சி அரசில் தொண்டை மண்டலம் அடங்கியிருந்தது. மதுரை அரசில் மதுரை, ராமநாதபுரம், திருநெல்வேலி, திருச்சி, கோயம்புத்தூர், சேலம், திருவாங்கூரின் ஒரு பகுதி ஆகியவை அடங்கியிருந்தன.
கிருஷ்ணதேவராயர் மறைந்த பின் அவரது சகோதரர் அச்சுதராயர், தன்னிடம் பணியாற்றிய செவப்ப நாயக்கருக்கு தன் மனைவியின் சகோதரியை திருமணம் செய்து கொடுத்து தஞ்சையை சீதனமாக வழங்கினார். 1532ல் தஞ்சை நாயக்கர் வம்சம் தோன்றியது. இவர் தம் காலத்தில் தமிழ், தெலுங்கு, கன்னடம், சமஸ்கிருதம் ஆகிய மொழிகளில் பல இலக்கியங்கள் உருவாயின. வெளிநாட்டவருடன் நாயக்கர்கள் வாணிபத் தொடர்பு கொண்டிருந்தனர். நாயக்கர் ஆட்சிக் காலத்தில் தான் மதுரையில் கிருத்துவ சமயப் பரப்பு சபை அமைக்கப்பட்டது. இராபர்ட்-டி-நொபலி, விவேகா, மார்டின்சு, டிகாஸ்டா போன்றோர் கிருத்துவ சமயத்தை பரப்பினர். இவர்களுக்கு பெரும் எதிர்ப்பு இருந்த போதிலும் திருமலை நாயக்கர் போன்ற மன்னர்கள் ஆதரவு நல்கினர்.
விஜயநகரப் பேரரசு வீழ்ச்சியடைந்து கொண்டிருக்கும் போது 1616-17ல் மதுரை மற்றும் செஞ்சி நாயக்கர்கள் தங்களின் சுதந்திரத்தை நிலைநாட்ட முயன்றனர். நாயக்க மன்னர்களில் மதுரையின் திருமலை நாயக்கரும், செஞ்சியின் இரண்டாம் கிருஷ்ணப்பரும், தஞ்சையின் ரகுநாதரும் குறிப்பிடத்தக்கவர்கள். நாயக்க மன்னர்களுள் ஏற்பட்ட பூசல்களால் 1617க்குப் பின் செஞ்சி நாயக்க வம்சமும், 1673ல் தஞ்சை நாயக்க வம்சமும், 1736ல் மதுரை நாயக்க வம்சமும் அழிவுற்றன. தஞ்சையிலும், செஞ்சியிலும் மராத்தியர் ஆட்சியும், மதுரையில் ஆற்காடு நவாப் ஆட்சியும் ஏற்பட்டன.
ஐரோப்பியர்:
செஞ்சி நாயக்கர் வம்சத்தில் உதித்த சென்னப்ப நாயக்கரிடமிருந்து 1639ல் சென்னையை விலைக்கு வாங்கி அங்கு தங்கள் குடியேற்றங்களை ஏற்படுத்தினர். 1640ல் புனித ஜார்ஜ் கோட்டை கட்டப்பட்டது. பிரெஞ்சுக்காரர்கள் பாண்டிச்சேரியிலும், காரைக்காலிலும் ஆதிக்கம் செலுத்தினர். நாயக்க மன்னர்கள், மராத்தியர், சேதுபதிகள், ஆற்காடு நவாபுகள் ஆகியோருக்கு நடந்து கொண்டிருந்த உட்பூசல்களை ஐரோப்பியர்கள் தங்கள் வளர்ச்சிக்குப் பயன்படுத்தினர். தஞ்சையில் மராத்தியர்களான பிரதாப்சிங்கிற்கும், சாயாஜிக்கும் இடையே ஏற்பட்ட உட்பூசல், ஆங்கிலேயர்கள் நம்நாட்டு உள் விவகாரங்களில் தலையிடக் காரணமாய் அமைந்தது.
திப்புசுல்தான்:
ஆதிக்கப் போட்டிகளில் ஆங்கிலேயரும் பிரெஞ்சுக்காரரும் எதிர் எதிர் அணி அமைத்தனர். ஆற்காடு நவாப் பதவிக்கு ஆங்கிலேயர் வாலாஜா வம்சத்தவருக்கும், பிரெஞ்சுக்காரர்கள் நவயத் வம்சத்தவரான சந்தாசகிப்புக்கும் ஆதரவளித்தனர். இதன் விளைவாக 1740-60களில் மூன்று கர்நாடகப் போர்கள் ஏற்பட்டன. இதில் ஹைதராபாத் நிசாம் பதவிக்கான போட்டியும் ஏற்பட்டது. முடிவில் ஆங்கிலேயரும், வாலாஜா வம்சத்து முகமது அலியும் வெற்றி பெற்றனர். இவர்களுக்கு உதவிய மைசூரின் படைத்தளபதி நஞ்சராஜா ஏமாற்றப்பட்டார். இதனால் மைசூருக்கும், ஆங்கிலேயருக்கும் பகை வளர்ந்தது. நஞ்சராஜாவால் ஹைதர்அலியின் வளர்ச்சியை தடுக்க இயலவில்லை. தொடர்ந்து ஹைதர்அலியும் அவரது மகன் திப்புசுல்தானும் ஆங்கிலேயருடன் நான்கு போர்களில் ஈடுபட்டனர். அவையே மைசூர் போர்கள் எனப்படுகின்றன. 1782ல் ஹைதர்அலி இறந்தார். 1799ல் திப்புசுல்தான் நான்காம் மைசூர்ப் போரில் கொல்லப்பட்டார். அவரது வாரிசுகள் வேலூர் சிறையில் அடைக்கப்பட்டனர்.
இதே காலத்தில் நவாப் முகமது அலியின் பெயரால் ஆங்கில அதிகாரிகள் பாளையக்காரர்களிடமிருந்து வரிவசூல் செய்தனர். தொடர்ந்து வரிப்பணத்தைக் கட்டி வந்த பாஞ்சாலங்குறிச்சிப் பாளைக்காரர் வீரபாண்டிய கட்டபொம்மன், தான் அவமானப் படுத்தப்பட்டபோது ஆங்கிலேயரை எதிர்த்தார். ஆனால் அவரது புரட்சி ஒடுக்கப்பட்டு 1799ல் கயத்தாறு எனுமிடத்தில் தூக்கிலிடப்பட்டார். இதனைத்தொடர்ந்து ஆங்கிலேயரை எதிர்க்க ஒரு கூட்டமைப்பு ஏற்பட்டது. இதில் கட்டபொம்மனின் சகோதரர் ஊமைத்துரையும், சிவகங்கை அரசர்கள் மருது சகோதரர்களும், திண்டுக்கல் கோபால் நாயக்கரும், மூண்டா ஜிவா போன்றோரும் கலந்து கொண்டனர். 1800-01ல் புரட்சி ஏற்பட்டது. முடிவில் இவர்கள் கைது செய்யப்பட்டு தனித்தனியே தூக்கிலிடப்பட்டனர். இது முதல் ஆங்கிலேயர்கள் தமிழகம் முழுவதும் நேரடியாக ஆதிக்கம் செலுத்தினர். 1806ல் வேலூர்க் கோட்டைச் சிறையில் அடைபட்டிருந்த திப்புவின் பிள்ளைகளுக்கு ஆதரவாக ஒரு கலகம் நடைபெற்றது. அதையும் ஆங்கிலேயர் ஒடுக்கினர்.
ஆங்கில ஆட்சிக் காலத்தில் இரயித்வாரி முறை மூலம் நிலவரி சீர்திருத்தம் கொண்டு வரப்பட்டது. நீதித்துறை சீரமைக்கப்பட்டது. 1861ல் சென்னை உயர்நீதி மன்றம் அமைக்கப்பட்டது. மேற்கத்திய கல்விமுறை புகுத்தப்பட்டது . 1857ல் சென்னை பல்கலைக்கழகம் துவங்கப்பட்டது. இக்காலக் கட்டத்தில் ஐரோப்பிய மொழி வல்லுநர்களின் முயற்சி காரணமாக தமிழ் இலக்கிய மறுமலர்ச்சி ஏற்பட்டது. தமிழ்மொழியில் நிறுத்தக் குறியீடுகள் இக்காலத்தில் தான் பயன்படுத்தப்படத் துவங்கின.
தொடரும்....
No comments:
Post a Comment