Tuesday, November 01, 2011

தமிழக வரலாறு: பாகம்-1

பழந்தமிழர்களின் காலம் சுமார் கி.மு. ஆயிரத்திலிருந்து தொடங்குவதாக ஆராய்ச்சியாளர்கள் கருதுகின்றனர். பழந்தமிழ் நாட்டின் எல்லைகளாக கிழக்கில் வங்காள விரிகுடாவும், மேற்கில் அரபிக்கடலும், தெற்கில் இந்துமாக்கடலும், வடக்கே விந்தயமலையும் இருந்தன. இப்பகுதியே தென்னாடு அல்லது திராவிட நாடு என முற்காலத்தில் வழங்கப்பட்டு வந்தது.


இந்தியாவில் திராவிட பண்பாட்டின் தாயகமாய் தமிழகம் இருந்து வருகிறது. ஆரியர்கள் இந்தியாவிற்கு வருவதற்கு முன்பிருந்தே இந்தியாவில் சிந்துவெளியிலும், ஏனைய பல பகுதிகளிலும் திராவிடர் வாழ்ந்து வந்தனர். வடஇந்தியாவில் ஆரியர் குடியேறிய பின் தெற்கு நோக்கி தள்ளப்பட்ட திராவிடர்கள், விந்திய மலைக்கு தெற்கே குடியேறினர். பண்டைத் தமிழகத்தின் பகுதிகளாக இன்றைய ஆந்திரம், கர்நாடகம், கேரளா, தமிழ்நாடு ஆகியவை இருந்தன.


சங்ககாலம்:

வரலாற்றுக்காலம் என்பது சங்ககாலத்திலிருந்தே துவங்குகிறது. சங்கத்தின் காலம் பற்றி வெவ்வேறு கருத்துகள் இருப்பினும் கி.மு.3ம் நூற்றாண்டிலிருந்து கி.பி.3ம் வரையே சங்ககாலம் என்பது அறிஞர் பலரின் கருத்து. சங்ககாலம் இலக்கிய வளர்ச்சிக்கும் சமயப்பொறைக்கும் இருப்பிடமாக அமைந்திருந்தது. இக்காலத்தில் வஞ்சியைத் தலைநகரமாகக் கொண்டு சேரரும், உறையூரைத் தலைநகராகக் கொண்டு சோழரும், மதுரையைத் தலைநகராகக் கொண்டு பாண்டியரும் ஆட்சி நடத்தினர்.


சங்ககால மக்கள் சாதிப்பாகுபாடு இன்றியும், சமயப்பூசல்கள் இன்றியும், வீரத்துடன் போர்நெறி பிறழாமலும், செங்கோண்மையோடும் வாழ்ந்தனர். இவர்களில் பெரும்பான்மையோர் விவசாயத்திலும், வாணிபத்திலும் ஈடுபட்டனர். சங்ககாலத் தமிழர் தாம் வாழ்ந்த நிலங்களை குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை எனப் பிரித்திருந்தனர். இக்காலத் தமிழர்கள் வெளிநாட்டவர்களுடன் வாணிபத்தொடர்பு கொண்டிருந்தனர். கிரீஸ், ரோம் நாடுகளுடன் கொண்டிருந்த தொடர்பு பற்றி சங்க இலக்கியங்களும், பெரிப்ளூஸ், பிளினி, தாலமி போன்ற வெளிநாட்டவர் குறிப்புகளும், தமிழகத்தில் கண்டெடுக்கப்பட்ட வெளிநாட்டவர் நாணயங்களும் தெரிவிக்கின்றன. ரோமப் பேரரசர் அகஸ்டஸின் அரசவைக்குப் பாண்டிய நாட்டு தூதுவர் இருவர் கி.மு. முதலாம் நூற்றாண்டில் சென்றிருந்ததை ஸ்டிராபோ என்ற வெளிநாட்டவர் குறிப்பு தெரிவிக்கிறது.


சங்ககால மன்னர்கள் ஒருவருக்கொருவர் போரிட்டு கொண்டு இருந்ததால் அந்நியரின் வருகை எளிதானது. கி.பி. 3ம் நூற்றாண்டில் களப்பிரர் எனும் இனத்தவர் தமிழ் மன்னர்களை வென்று, தமது ஆட்சியை நிறுவினர். கி.பி. 6ம் நூற்றாண்டு வரை சுமார் 3 நூற்றாண்டுகள் காலம் ஆட்சி செய்த இவர்கள், தங்கள் காலத்தில் என்ன செய்தார்கள் என்ற தடயம் எதனையும் விட்டுசெல்லாத காரணத்தால் அவர்கள் காலம் தமிழக வரலாற்றில் இருண்ட காலம் எனப்படுகிறது. இக்களப்பிரர்கள் சமணம் அல்லது பெளத்த சமயத்தை சேர்ந்தவர்களாக இருந்திருக்கலாம் எனக் கருதப்படுகின்றனர்.


பல்லவர்:

கி.பி. 4ம் நூற்றாண்டு முதல் தமிழகத்தின் வடபகுதியில் பல்லவர்கள் ஆட்சி செய்தனர். இவர்கள் முற்காலப்பல்லவர் எனப்படுவர். கி.பி. 7ம் நூற்றாண்டின் துவக்கத்திலிருந்து ஆட்சி செய்த மன்னர்கள் பிற்கால பல்லவர் எனப்படுவர். இவர்கள் காலத்தில் முதலாம் மகேந்திர வர்மன் முதன்முதலில் தமிழகத்தில் குடைவரை கோவில் அமைத்தார். இவரது குடைவரைக்கோவில்கள் மாமண்டூர், மண்டகப்பட்டு, சீயமங்கலம், நாமக்கல், பல்லாவரம், திருக்கழுக்குன்றம், திருச்சி, ஆகிய இடங்களில் காணப்படுகின்றன. அவரது மகனான முதலாம் நரசிம்மவர்மன் கி.பி. 631ல் இலங்கையை வென்றார்.


பல்லவர் காலத்தில்தான் தமிழ்நாட்டில் பக்தி இயக்கம் துவங்கியது. சைவ நாயன்மார்களும், வைணவ ஆழ்வார்களும் தோன்றினர். இவர்கள் சமண, பெளத்த மதத்தை சார்ந்தவர்களை மனம்மாற்ற முயன்றனர். மகேந்திர வர்மன் மூலம் அப்பரும், தெற்கே கூன்பாண்டியன் மூலம் திருஞானசம்பந்தரும் சமணரை வீழ்த்தினர். பல்லவர்கள் காலம் தென்னிந்தியக் கட்டடக் கலை வளர்ச்சிக்கு முன்னோடியாக இருந்தது.


தொடரும்....

2 comments:

  1. இன்னும் ரசிக்கிற மாதிரி எழுதுங்க

    ReplyDelete
  2. அருமையான பணி நண்பரே
    கொஞ்சம் மூல சுட்டிகளும் அளித்தால் நலமாக இருக்கும்.தொடர்கிறேன்!!!!!!!
    நன்றி

    ReplyDelete