Wednesday, November 02, 2011

தமிழக வரலாறு: பாகம்-2

சோழர்கள்:

9-ஆம் நூற்றாண்டின் இறுதிக் காலத்தில் சோழப் பேரரசு உதயமானது. இச்சோழப் பேரரசுகளில் சிறந்தவர் முதலாம் ராஜராஜன். அவர் காலத்தில் ஏறத்தாழ தென்னகம் முழுவதும் சோழர்களின் ஆட்சிக்குட்பட்டிருந்தது. இலங்கையை வென்று வடஇலங்கையில் சோழர் ஆட்சியை ஏற்படுத்திய பெருமை முதலாம் ராஜராஜனையேச் சாரும். இது "மும்முடிச் சோழ மண்டலம்" என அழைக்கப்பட்டது. இவரால் அமைக்கப்பட்ட தஞ்சை பெரியகோவில் இவரது வெற்றிக்கும், கலை ஆர்வத்துக்கும் எடுத்துக்காட்டாய் அமைந்துள்ளது. இவருக்குப் பின் 13ம் நூற்றாண்டின் துவக்கம் வரை சோழப் பேரரசைக் கட்டிகாத்தவர்கள் முதலாம் ராஜேந்திரனும், முதலாம் குலோத்துங்கனும், மூன்றாம் குலோத்துங்கனும் ஆவர். முதலாம் ராஜேந்திரன் வடஇந்தியாவின் மீது படையெடுத்து கங்கை வரை சென்று "கங்கைகொண்டான்" எனப் போற்றப்பட்டான். அதன் நினைவாக கங்கைகொண்ட சோழபுரம் எனும் புதிய நகரை நிர்மானித்தான். முதலாம் குலோத்துங்கன் காலத்தில் 13 பேர் கொண்ட குழு ஒன்று சீனா, இந்தோனேசியா போன்ற நாடுகளுக்குச் சென்றது. சோழர் காலத்தில் உள்ளாட்சி முறை மிகச் சிறப்பாகச் செயல்பட்டது. குடவோலை முறையில் உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

பாண்டியர்கள்:

13 ம் நூற்றாண்டின் துவக்கம் சோழப் பேரரசின் வீழ்ச்சிக்கும், பாண்டியர் தம் எழுச்சிக்கும் வித்திட்டது. முதலாம் மாறவர்மன் சுந்தர பாண்டியன் பாண்டிய நாட்டைச் சோழ நாட்டின் பிடியிலிருந்து மீட்டார். முதலாம் சடையவர்மன் சுந்தரபாண்டியன் தென்னகம் முழுவதையும், இலங்கையையும் வென்று "எம் மண்டலமும் கொண்டருளியவன்" என்ற சிறப்புப் பெற்றார். இவ்வாறு தமிழ்மன்னர்கள் ஒருவருக்கொருவர், ஒரு வம்சம் மற்றொரு வம்சத்திற்கு எதிராகப் போர் செய்து தங்களது செல்வாக்கை நிலைநாட்டினர். இது நீண்ட காலம் நீடிக்கவில்லை.

மாலிக்காப்பூர்:

தில்லி சுல்தானாகஇருந்த அலாவுதீன் கில்ஜி 1310ல் தென்னிந்திய இந்து அரசுகளை ஒடுக்கவும், கொள்ளையடிக்கவும் தன் படைத் தலைவனான மாலிக்காபூரை அனுப்பினார். அப்போது தென் இந்தியாவில் தேவகிரியில் யாதவர் அரசு, துவார சமுத்திரத்தில் ஹொய்சாள அரசு, வாரங்கல்லில் காகத்திய அரசு, மதுரையில் பாண்டிய அரசு ஆகியன இருந்தன. மாலிக்காபூர் முதலில் தேவகிரியையும் பின்பு வாரங்கல் மற்றும் துவார சமுத்திரத்தையும் தோற்கடித்து ஏராளமான பொருட்களை கவர்ந்து சென்றார். அக்காலத்தில் மதுரையை ஆண்டு வந்தவர்கள் மாறவர்மன் குலசேகர பாண்டியனும், அவரது மகன்களான வீரபாண்டியனும் சுந்தரபாண்டியனும் ஆவர். இவர்கள் பெரும் பரப்பினைக் கொண்ட பேரரசினை வெவ்வேறு தலைநகரங்களிலிருந்து ஆட்சி செய்தனர். மாறவர்மன் குலசேகரின் மற்றொரு மனைவியின் மகன் ராஜராஜன் சுந்தரன் என்பவர் மாலிக்காபூருடன் சேர்ந்து கொண்டார்.

இந்நிலையில் மாலிக்காபூர் ஏராளமான சேதத்தை விளைவித்து, கோயில்களை இடித்து, பலரைக் கொன்று, ஏராளமான செல்வங்களை கவர்ந்து சென்றார். இதனால் நாட்டில் வறுமை பல்கிப் பெருகியது. இச்சூழலில் தான் கேரள மன்னன் ரவிவர்மன் குலசேகரன், பாண்டிய நாட்டின் மீது தன் மேலாதிக்கத்தினைச் சிலகாலம் நிலை நாட்டினார். ஹொய்சாள அமைச்சர்களின் உதவியோடு பாண்டியர்கள் மீண்டும் நாட்டை மீட்டனர். மீண்டும் 1314ல் அலாவுதீன் கில்ஜியின் மகனான முபாரக் ஷாவின் படைத்தலைவரான குசுரு கானின் தலைமையில் ஒரு படை மதுரையைக் கொள்ளையடித்துச் சென்றது. தில்லிசுல்தான் முகமது பின் துக்ளக் ஆட்சியில் மாபார் என அழைக்கப்பட்ட தமிழ்நாட்டை தில்லி அரசுடன் சேர்க்க முயற்சி செய்யப்பட்டது.

1327ல் மதுரையின் ஆளுநராக ஜலாலுதீன் ஹசன்ஷா என்பவர் நியமிக்கப்பட்டார். மாபார் எனப்பட்ட தமிழகம் தில்லிசுல்தானியத்தின் 23 மாநிலங்களில் ஒன்றாக்கப்பட்டது. 1335ல் ஹசன்சா தில்லியிலிருந்து பிரிந்து சுதந்திரமாக இயங்கத் துவங்கினார். மதுரை சுல்தானியத்தை உருவாக்கினார். இவரைத் தொடர்ந்து ஏழு சுல்தான்கள் சுமார் 40 ஆண்டுகள் ஆட்சிசெய்தனர். இவர்களில் கியாசுதீன் தங்கணிசா என்பவர் மிகக் கொடுமையான ஆட்சி செய்தார் எனக் கூறப்படுகிறது.


விஜயநகரம்:

இந்து சமயத்தையும் இந்து பண்பாட்டையும் காக்க வேண்டும் என ஹரிஹரர், புக்கர் எனும் சகோதரர்கள் இந்து அரசு ஒன்றினை விஜயநகரில் கி.பி. 1336ல் உருவாக்கினர். புக்கர் மதுரை சுல்தான்களின் கொடுமையை ஒழித்துக் கட்ட ஹஸன்கங்கு என்ற சுல்தானுடன் போர் புரிந்தார். 1371ல் புக்கரின் மூத்த மகன் குமார கம்பணர் மதுரை சுல்தான்களின் ஆட்சிக்கு முடிவு கட்டியதோடு விஜய நகர ஆதிக்கத்தையும் நிலைநாட்டினார். மூடப்பட்ட கோவில்கள் திறக்கப்பட்டு வழிபாட்டு நெறிகள் நடைமுறைபடுத்தப்பட்டன. அரங்கநாதனின் திருவுருவச்சிலை மீண்டும் திருவரங்கத்திலே வைக்கப்பட்டது. குமார கம்பணர் விஜயநகர ஆட்சிக்குட்பட்ட தமிழகப் பகுதியின் ஆளுநராக இருந்தார். கி.பி.1371 முதல் கி.பி.1525 வரை விஜயநகர அரசுகள் தமிழகம் முழுவதையும் தங்களது ஆட்சியின் கீழ்கொண்டு வந்தனர். 1525ல் விஜயநகரப் பேரரசை ஆண்ட கிருஷ்ணதேவராயர் தம் ஆட்சிக்கு உட்பட்ட தமிழகத்தை பிரித்துத் தம் ஆளுநர்களிடம் ஒப்படைத்தார்.


தொடரும்....

1 comment: