Monday, November 14, 2011

தமிழக வரலாறு: பாகம்-4

சுதந்திர போராட்டம்:

19ஆம் நூற்றாண்டில் அகில இந்தியாவில் ஏற்பட்டது போல் தமிழகத்திலும் தேசிய உணர்வு தலை தூக்கியது. மதராசு மகாஜன சபை இந்திய தேசியக் காங்கிரஸ் உருவாக முன்னோடியாக அமைந்தது. 1885ல் இந்திய தேசிய காங்கிரஸ் பம்பாயில் கூடுவதற்கான துவக்க பணிகள் சென்னையில் தான் நடைபெற்றன. தேசிய விடுதலை இயக்கத்தில் ஈடுபட்டவர்களில் வ.உ.சிதம்பரனார் (1872-1936) ஆங்கிலக் கம்பெனிக்கு எதிராக சுதேசி கப்பல் கழகம் ஒன்றை உருவாக்கினார். மகாகவி சுப்பிரமணிய பாரதியார் (1882-1921) எளிய தமிழில் விடுதலை வேட்கைப் பாடல்களை இயற்றியும் பாடியும் மக்கள் மனதில் தேசிய உணர்வினை பதித்தார். புரட்சிவாதிகளான வ.வே.சு. ஐயர், நீலகண்ட பிரம்மச்சாரி போன்றவர்கள் வன்முறை புரட்சி மூலம் விடுதலை பெற முயன்றனர். வாஞ்சிநாதன் என்ற இளைஞர் 1911ல் திருநெல்வேலி ஆட்சித் தலைவர் ஆஷ் என்பவரை மணியாச்சிப் புகைவண்டி நிலையத்தில் சுட்டுக் கொன்றார். இந்து, சுதேசமித்திரன், இந்தியா, ஆந்திரப் பிரகாசிகா போன்ற பத்திரிக்கைகளும் விடுதலை உணர்வை தூண்டின. 1916-18ல் சென்னையில் அன்னிபெசன்ட் அம்மையார் தன்னாட்சி இயக்கத்தை நடத்தினார்.

காந்திய சகாப்தத்தில் 1920ல் நடைபெற்ற ஒத்துழையாமை இயக்கம், 1930ல் நடந்த சட்டமறுப்பு இயக்கம், 1942ல் நடந்த வெள்ளையனே வெளியேறு இயக்கம் ஆகியவற்றிலும் தமிழ்நாடு பெரும்பங்கு எடுத்துக் கொண்டது. காந்திஜியின் தண்டியாத்திரையின் போது தமிழகத்தில் சி.ராஜகோபாலச்சாரியார் திருச்சியிலிருந்து வேதாரண்யம் வரை பாதயாத்திரை சென்று உப்புச் சட்டங்களை மீறினார். 1932ல் கொடிப் போராட்டத்தில் திருப்பூர் குமரன் கலந்து கொண்டு உயிர்த்தியாகம் செய்தார்.

நீதிக்கட்சி:

இந்தக் காலகட்டத்தில் தான் சென்னை மாநிலத்தில் பிராமணரல்லாதார் இயக்கம் ஒன்று உருவாக்கப்பட்டது. இதுவே பின்னர் காங்கிரசுக்கு எதிரான நீதிக்கட்சியாக வளர்ந்தது. இக்கட்சி 1920 முதல் 1937 வரை இடையில் மூன்று ஆண்டுகள் தவிர்த்து மாநில ஆட்சிப் பொறுப்பில் இருந்தது. 1920ல் இக்கட்சியைச் சேர்ந்த ஏ.சுப்புராயலு என்பவர் மாநில பிரதம அமைச்சராகப் பொறுப்பேற்றார். இவரைத்தொடர்ந்து பனகல் அரசர், முனுசாமி நாயுடு, பொப்பிலி அரசர் ஆகியோர் பிரதம அமைச்சர்களாக இருந்தனர். இடையில் 1926-30களில் ஜமீன்தார் சுப்பராயன் தலைமையில் சுயேட்சை அரசு செயல்பட்டது. நீதிக்கட்சியின் ஆட்சிக் காலத்தில் ஆந்திரப் பல்கலைக் கழகமும், அண்ணாமலை பல்கலைக் கழகமும் துவக்கப்பட்டன. வகுப்புவாரிப் பிரதிநிதித்துவத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது.இந்து அற நிலைய நிர்வாக குழு அமைக்கப்பட்டது. இந்தியாவிலேயே முதன்முதலாக அரசுப் பணியாளர் தேர்வுக்குழு அமைக்கப்பட்டது. 1937ல் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் பெருவாரியான இடங்களை பெற்று ஆட்சிக்கு வந்தது. இராஜஜி அதன் முதல் பிரதம அமைச்சரானார். மதுவிலக்கு அமல்படுத்தப்பட்டது. ஆலய நுழைவுச் சட்டம், விவசாயி கடன் நிவாரணச் சட்டம் கொண்டு வரப்பட்டது. இந்தி கட்டாயப் பாடம் ஆக்கப்பட்டது. கட்டாய இந்தியை எதிர்த்து போராட்டங்கள் வெடித்தன. 1954-56ல் மொழிவாரி மாநிலங்கள் உருவாக்கப்பட்ட போது இன்றைய தமிழகம் மதராஸ் மாநிலமாக்கப்பட்டு, பின் 1967 ஜீலை 18ல் தமிழ்நாடு ஆனது.


**முடிந்தது**

சங்க காலம் முதல் சுதந்திர காலம் வரையிலான, தமிழகத்தின் வரலாறு தொடர்பான கட்டுரை தொகுப்புகள் இத்துடன் முடிவுற்றன. தமிழகத்தின் சிறப்புகள் தொடர்பான அடுத்த கட்டுரையில் சந்திப்போம்.

No comments:

Post a Comment